This article is from Mar 09, 2018

இளைஞர்களை ஊக்குவிக்கும் ” ஜீரோ தாண்டா ஹீரோ ” பாடல் !

என்னிடம் ஏதும் இல்லை, நான் ஒரு ஜீரோ எனக் கூறும் இளைஞர்கள் குரு கல்யாண் இசையமைத்த “ ஜீரோ தாண்டா ஹீரோ ” என்ற பாடலை கேட்கும் பொழுது அனைத்தின் தொடக்கமும் ஜீரோவில் இருந்து தான் தொடங்குகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

திரு.ராசி அழகப்பன் எழுத அதற்கு இசையமைத்து பாடி வெளியிட்டுள்ளார் குரு கல்யாண். வாழ்க்கையில் ஹீரோவாக கனவு காணும் இளைஞர்களுக்கு இப்பாடல் ஓர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்றே இப்பாடலை உருவாக்கியதாக கூறியுள்ளார் இப்பாடலின் இசையமைப்பாளர்.

அடுத்தவரின் நிலையைக் கண்டு தம்மால் அத்தகைய உயரத்திற்கு செல்ல முடியவில்லை என நினைக்கும் இளைஞர்கள் ஜீரோ என்னும் தொடக்கப் புள்ளியில் தான் அனைத்தும் ஆரம்பிக்கின்றது என்பதை உணர வேண்டும் என்கிறார். ஒரு நாளின் தொடக்கம் எவ்வாறு ஏதுமின்றி தொடங்குகிறதோ அதேபோல் தான் வாழ்க்கையும் தொடங்குகிறது. நம் எண்ணம் தான் நம் வாழ்வை தீர்மானிக்கும். ஆகையால், ஜீரோ என்பதை கூட ஹீரோவாக நினைக்க வேண்டும் என்று எண்ணத் தூண்டுகிறது இப்பாடலின் வரிகள்.

இளைஞர்கள் தன்னம்பிக்கை என்னும் விதையை விதைத்து கொண்டே செல்ல வேண்டும். வாழ்வில் ஒவ்வொரு செயலையும் நம்பிக்கையுடன் முயற்சி செய்வது குறித்து அய்யன் வள்ளுவன் கூறாத வார்த்தைகளே இல்லை. இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் காலம் ஐயாவின் “ எதையும் தொடங்குவதற்கு முன் தோல்வியை கண்டு அஞ்சாதே, ஏனெனில் வெற்றிகரமான கணிதம் கூட ஜீரோவில் தான் தொடங்குகிறது ” என்ற வாசகமும்,  “ என்னை நானே ஜீரோவிற்கு தாழ்த்திக்கொள்வது தான் உயர்வு ” என்னும் காந்தியடிகளின் வாசகமும் இப்பாடலில் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கையில் கடினமான தருணத்தில் கூட அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும், சோகத்தில் இருப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை என்பதால் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதையும் தன் பாடல் வரிகளின் மூலம் அழகாக கூறியுள்ளார்.

“ மனிதா மனிதா ” என்ற பாடலின் மூலம் இசையமைப்பதை தொடங்கிய குரு கல்யாண், தமிழர்களின் வீரம் சார்ந்த பாடல்கள், விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். போராட்டத்தில் இருந்து மீண்டு எழுந்து ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்றால், எவ்வளவு சரிவை தாங்கி கொள்ள வேண்டும் ! எவ்வளவு வலியை தாங்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் “ மனிதா மனிதா எழுந்து வா ” பாடல் வரிகள் அவரின் வாழ்க்கைப் போராட்டத்தை பிரதிபலிப்பவை என்றுள்ளார்.  

ஜீரோ தாண்டா ஹீரோ என்ற பாடல் இடம்பெறுவது குரு கல்யாண் இசையமைக்கும் புதிய ஆல்பம் பாடல். இவரின் முதல் படமே “ மாத்தி யோசி ”. இவை மட்டுமின்றி தனியாக youtube சேனல் ஒன்றிலும் தாம் இசைக்கும் பாடல்களை வெளியிட்டு வருகிறார்.

இன்றைய நவீன உலகில் என்னால் எதையும் சாதிக்க முடியவில்லை, நான் ஒரு ஜீரோ என நினைக்கும் இளைஞர்கள் இப்பாடலை கேட்ட பிறகு ஜீரோவிற்கு இருக்கும் மதிப்பை உணர்வர். ஜீரோ என்னும் தொடக்கத்தை கண்டுபிடிக்க முடிந்த நம்மால் வெற்றியை அடைவது ஒன்றும் எளிதில்லையே…… 

Guru kalyan music page videos

Please complete the required fields.




Back to top button
loader