அசல் ஓட்டுனர் உரிமம் இனி கட்டாயமா ?

பரவிய செய்தி
செப்டம்பர் 6 முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
தமிழக அரசு அறிவித்தது போன்று வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருப்பது அவசியம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
விளக்கம்
செப்டம்பர் 1 முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருப்பது அவசியம் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது சென்னை உயர்நீதிமன்றமும் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
சாலைகளில் ஏற்படும் விபத்துகளை குறைக்கவும், போலி ஓட்டுனர் உரிமங்களை கண்டறிவதற்கும் செப்டம்பர் 1 முதல் வாகன ஓட்டிகள் தங்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் வைத்திருப்பது கட்டாயம் என்ற ஆணையை தமிழக அரசு பிறப்பித்தது. இதை தொடர்ந்து மக்களின் மத்தியில் பல எதிர்ப்புகள் எழுந்தன.
மாநில அரசின் அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தது. அவர்களது மனுவில், வாடகை வாகனங்கள் ஓட்டும் ஓட்டுனர்கள் தங்களது ஓட்டுனர் உரிமத்தை வாகனத்தின் உரிமையாளர் அல்லது நிறுவனத்திடம் ஒப்படைத்திருப்பர். அசல் ஓட்டுனர் உரிமத்தை உடன் எடுத்து சென்று அது தொலைந்து விட்டால், புதிய ஓட்டுனர் உரிமம் பெறுவது கடினமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு அறிவித்தது போன்று அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க அவசியம் இல்லை என்று கூறியது. மேலும் அரசின் அறிவிப்பு தொடர்பாக வழக்கு ஒன்றை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவர்கள் தொடுத்தார்.
எனினும், தமிழக அரசின் அறிவிப்பை செல்லாது என்று அறிவித்த நீதிபதியின் அறிவிப்பு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பெனர்ஜி அறிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு கூறியது போல வாகன ஓட்டிகள் தங்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை உடன் வைத்திருப்பது அவசியம் என்றும் கூறியுள்ளார். மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 181 ன் படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 3 மாதங்கள் சிறை அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது. ஆனால் மத்திய அரசு டிஜிலோக்கர் முறையில் ஓட்டுனர் உரிமத்தை பதிவு செய்தால், ஓட்டுனர் உரிமத்தை வைத்திருப்பது அவசியம் இல்லை என்று கூறியிருந்தது குறுப்பிடத்தக்கது.
சட்டங்கள் மக்களின் நலனுக்காகவே தவிர மக்களை சிரமத்திற்குள்ளாகும் ஒன்றாக அமைந்துவிட கூடாது.