அதானி மனைவியின் முன் தலைகுனிந்தாரா மோடி ?

பரவிய செய்தி
இந்திய அரசிற்கு பல்லாயிரம் கோடி வரிபாக்கி வைத்திருக்கும் குஜராத் கார்ப்பரேட் முதலாளி அதானியின் மனைவிக்கு தலைகுனிந்து மரியாதை செலுத்தும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
மதிப்பீடு
சுருக்கம்
24 செப்டம்பர் 2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி அவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு சென்ற போது, தும்கூரின் மேயர் கீதா ருத்ரேஷை மரியாதை நிமித்தமாக வணங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
விளக்கம்
யார் இந்த பெண்மணி? எதாவது நாட்டின் ஜனாதிபதியா ? நீதிமன்றத்தின் நீதிபதியா? சுதந்திரப் போராட்ட வீராங்கனையா ? நாட்டிற்காக உயிர் நீத்த தியாகியின் மனைவியா ? அல்ல நாட்டின் வளர்சிக்காக தனது சொத்துக்களை எல்லாம் அரசுக்கு தானம் செய்தவரா ?. இவற்றில் எதுவுமே இல்லை.
72 ஆயிரம் கோடிகளுக்கு மேல் இந்திய அரசிற்கு வரிபாக்கி வைத்திருக்கும் கார்ப்பரேட் பீமன் குஜராத் தொழிலதிபர் அதானியின் மனைவியின் முன்பு தலைகுனிந்து நிற்கும் நமது தேசப் பிரதமர் என்றுக் கூறி இப்படங்கள் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகியுள்ளன.
ஆனால், இவ்வாறு கூறியது அனைத்தும் உண்மையல்லவே. அதானியின் மனைவி என்று பரவியப் படத்தில் இருப்பவர் தும்கூர் மாநகராட்சியின் மேயர் ஆவார்.
திரு. நரேந்திர மோடி அவர்கள் இந்திய பிரதமராக பதவியேற்றப் பிறகு 2014 செப்டம்பர் 24-ம் தேதி முதல் முறையாக கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். அவரை முன்னாள் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலர் வரவேற்றுள்ளனர். கர்நாடகாவிற்கு சென்ற மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இறுதியாக தும்கூர் மாவட்டம் குப்பி தாலுக்கா நிட்டூர் கிராமத்தில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள என்.எல்.சி நிறுவனத்தின் இராணுவ ஹெலிகாப்டர் உற்பத்தி பிரிவின் விரிவாக்க திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வந்துள்ளார். அப்போது, அவரை வரவேற்ற தும்கூர் மாநகராட்சியின் மேயர் கீதா ருத்ரேஷ்க்கு மரியாதை செலுத்தும் விதமாக மோடி வணங்கியுள்ளார்.
ஆனால், மோடி அவர்கள் வணங்கியது தும்கூர் மேயர் என்று அறியாமல் அதானியின் மனைவியை வணங்கியதாகக் கூறித் தவறான செய்திகளைச் சிலர் பரப்பி வருகின்றனர்.