அதிகரிக்கும் செல்ஃபி விபத்து! இளைஞர் மரணமா ?

பரவிய செய்தி
21 வயது இளைஞர் ஒருவர் ஓடும் இரயிலுக்கு மிக அருகில் செல்ஃபி எடுக்க முயன்ற போது இரயிலில் மோதி உயிரிழந்தார்.
மதிப்பீடு
சுருக்கம்
செல்ஃபி மோகத்தால் வேகமாக வரும் இரயிலுக்கு மிக அருகில் நின்று செல்ஃபி வீடியோ எடுத்த இளைஞர், தலையில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
விளக்கம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் ஓடும் இரயிலுக்கு மிக அருகில் செல்ஃபி எடுக்க முயன்ற போது இரயிலில் மோதி தூக்கி எறிவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகியது. மேலும், விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரழந்ததாகவும் செய்திகள் பரவின.
ஹைதராபாத்தைச் சேர்ந்த 21 வயதான சிவா என்ற இளைஞர் ஜிம் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். செல்ஃபி புகைப்படங்களின் மோகத்தால் போரபந்தா இரயில் நிலையத்திற்கு அருகே, தண்டவாளத்தில் வரும் இரயில் முன்பு செல்ஃபி எடுக்க திட்டமிட்டுள்ளார். இரயில் மிக அருகில் வரும் சமயத்தில் அருகில் இருந்தவர்கள் எச்சரிக்கை செய்வதைக் கூட ஏற்காமல், ஒரு நிமிடம் என்று கூறி தண்டவாளத்திற்கு மிக அருகில் தயாராக நின்றுள்ளார்.
அச்சமயத்தில் அவருக்கு பின்னால் வேகமாக வந்த இரயில், இளைஞர் மீது மோதியதால் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே பாதுகாப்பு படையினரின் விசாரனைக்கு பிறகு இளைஞரின் மீது ரயில்வே சட்டம் 1989-ன் படி 147-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அதன் பின்னர் இளைஞர் சிவா நீதிமன்றத்தில் ஆஜராகி, ரூ.500 அபராத தொகையாக செலுத்தினார். 21 நிமிடம் எடுக்கப்பட்ட அந்த செல்ஃபி வீடியோ ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் 1000 கணக்கில் ஷேர் செய்யப்பட்டது. விரைவாக வரும் இரயிலின் முன்பு நின்று செல்ஃபி எடுத்துக் கொள்வதும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த கார்னெகி மெல்லோன் பல்கலைக்கழகத்தின் PhD மாணவர் ஹெமன்க் மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஆய்வில், 2014 செப்டம்பர் முதல் 2016 இடைப்பட்ட காலத்தில் மட்டும் உலகம் முழுவதும் செல்ஃபி மோகத்தால் 127 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 76 மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்தவை மற்றும் இவ்வாறு இறப்பவர்களில் பெரும்பாலும் இளைஞர்களையே என்றும் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டும் கர்நாடகாவில் இதே போன்று இரயில் முன்பு செல்ஃபி எடுக்க மூன்று இளைஞர்கள் முயன்றுள்ளனர், செல்ஃபியால் டெல்லியில் இரண்டு இளைஞர்கள் இரயில் மோதி இறந்துள்ளனர்.