அப்படி என்ன பேசினார் ஜீயர் ? முழுமையான பேச்சு.

பரவிய செய்தி
கல் எறியவும், சோடா பாட்டில் வீச எங்களுக்கும் தெரியும் என்று ஜீயர் சடகோப இராமானுஜர் கூறியுள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து தவறாக பேசியதாக எழுந்த சர்ச்சைக்கு பல்வேறு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
ஆண்டாள் சர்ச்சையில் வைரமுத்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி ஜீயர் சடகோப இராமானுஜர் ஆண்டாள் கோவிலில் உண்ணாவிரதம் இருந்தார். பின் அதிகாரிகள் பேசியதை அடுத்து உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார். மேலும், வைரமுத்து பிப்ரவரி 3-ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்றைய குடியரசு தினத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜீயர், “ வைரமுத்து ஆண்டாள் மீது அம்மாவிற்கு உண்டான மதிப்பு வைத்திருந்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து மன்னிப்பு கேட்கும் வரை இந்து மக்களாகிய நாம் அனைவரும் அறவழியில் போராட வேண்டும். அங்காங்கே மற்ற ஊர்களில் உள்ள கடவுளின் குழந்தைகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுகிறோம், அவர் மன்னிப்பு கேட்கா விட்டால் நாங்கள் தொலைபேசி வாயிலாக உங்களுக்கு கூறுவோம்.
இன்னொருவன் இந்து மதத்தை பற்றி பேசாமல் இருக்க வேண்டும் என்றால், இந்து மக்களை பிரிக்க கூடாது என்றால், நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி நாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களையும் கேட்க வைக்க வேண்டும். வைரமுத்து போன்றே குளத்தூரில் ஒருவர் மீண்டும் ஆண்டாளை சர்ச்சை செய்ய போகிறார்கள்.
எந்த தாயையும், எந்த கடவுளையும் மேடையில் யாரும் தவறாக பேசக் கூடாது. அப்படி பேசினால், நாம் அனைவரும் அங்கு சென்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
இத்தனை நாட்கள் சாமியார்கள் அனைவரும் சும்மா உட்கார்ந்து இருந்தோம். எங்களுக்கும் கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் தெரியும். ஆனால், நாம் அப்படி செய்யக் கூடாது என்ற முறை உள்ளது. எனவே அவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று அறவழியில் ஆண்டாளை வேண்டிக் கொள்கிறோம்.
கடை அடைப்பு, போராட்டம் என்று வன்முறையில் இறங்காமல், அறவழியில் போராடுவதற்கு கூட அனுமதி பெற வேண்டிய சுதந்திரமற்ற நிலையில் உள்ளோம். இன்று ஜனவரி 26 கொடியெல்லாம் குத்தி இருக்கிறீர்கள் என்ன தினம் ?.. இன்று குடியரசு தினம் குடிப்பதற்கான தினமாக உள்ளது. அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறந்து வைத்துள்ளனர் ” என்று கூறியுள்ளார்.