அரிசி வழங்காததால் பசியால் குழந்தை மரணம்.

பரவிய செய்தி
குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காத காரணத்தால் குடும்ப அட்டை ரத்து செய்ததையடுத்து அரிசி வழங்கப்படாததால் பசியால் குழந்தை உயிரழப்பு.
மதிப்பீடு
சுருக்கம்
ஜார்கண்டில் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்பதால் குடும்ப அட்டை ரத்து. மானியவிலை அரசி கிடைக்காத நிலையால் பசியில் 11 வயது குழந்தை மரணம்.
விளக்கம்
குடும்ப அட்டையுடன் தனி நபர் அடையாளமான ஆதார் அட்டையின் எண்ணை இணைக்காததால் அரிசி வழங்கப்படவில்லை என்பதால் பசியால் 11 வயது குழந்தை மரணம். இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஜார்கண்ட் முதல்வர் உத்தரவு.
செப்டம்பர் 28 , ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஓர் கிராமத்தில் சந்தோஷி குமாரி என்ற 11 வயது குழந்தை பசியால் உயிரிழந்தார். குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்பதால் நியாயவிலைப் பொருட்கள் வழங்க முடியாது என்று கூறி குடும்ப அட்டையை ரத்து செய்துள்ளனர். உண்பதற்கு அரசி இல்லை என்பதால் பசியின் கொடுமையால் குழந்தை இறந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அளித்த அறிக்கையில், நீண்ட நாட்களாக குழந்தைக்கு மலேரியா பாதிப்பு இருந்ததால் குழந்தை இறந்தது என்று கூறியுள்ளனர். ஆனால், அக்குழந்தையின் பெற்றோர் குழந்தை இறக்கும் தருணத்தில் அழுதுக்கொண்டே அரிசி (Bhat-Bhat) என்று கூறியதாக தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கு செல்லும் வரையில் சந்தோஷிக்கு உணவு கிடைத்ததாகவும், துர்கா பூஜை விடுமுறை என்பதால் குடும்பமே 4 அல்லது 5 நாட்கள் பட்டினியால் வாடியதாக அக்குழந்தையின் தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது கூறியுள்ளார். மேலும், 700 வீடுகளை கொண்ட அக்கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடும்ப அட்டையை இழந்துள்ளதாக அவர் கூறினார்.
ஜார்கண்ட் முதல்வர் ரகுபார் தாஸ், இச்சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், சந்தோஷி குடும்பத்தின் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது. இனி ஜார்கண்டில் இதுபோன்று எந்தவொரு சம்பவமும் நிகழக் கூடாது என்று அதிகாரிகளிடம் தனது ஆத்திரத்தை வெளிபடுத்தி உள்ளார்.
குழந்தையின் மரணம் குறித்து ஜார்கண்டின் உணவுத்துறை மற்றும் குடிமைப் பொருட்கள் வழங்கத்துறையின் அமைச்சர் சரூய் ராய் ஆளும் தனது அரசாங்கத்தின் மீதே குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஆதார் எண்னை இணைக்கவில்லை என்றாலும் நியாயவிலை கடைகளில் மானியவிலை பொருட்கள் வழங்கியே தீரவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவ்வாறு பசியால் உயிரிழந்த குழந்தைப் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் பரவியதை திசைத் திருப்ப மலேரியாவால் இறந்ததாக மாற்றி செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர்.
70 வருட சுதந்திர இந்தியா, டிஜிட்டல் இந்தியா என்று கூறும் இந்த தேசத்தில் தான் இன்றளவும் பசியால் குழந்தைகள் இறந்து போகும் கொடுமையெல்லாம் நிகழ்ந்துக் கொண்டிருகின்றது.