அரியலூர் மாணவர்களின் கல்விக்காக உதவிய விஜய் சேதுபதி.

பரவிய செய்தி
அண்மையில் தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததற்காக கிடைத்த வருமானத்தில் ரூ 50 லட்சத்தை மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்விக்காக உதவியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
மதிப்பீடு
சுருக்கம்
அரியலூர் மாவட்டம் மாணவி அனிதாவின் நினைவாக மாணவர்களின் கல்வி உதவிக்காக ரூ 50 லட்சம் அளிப்பதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
விளக்கம்
விஜய் சேதுபதி அண்மையில் ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் நடித்ததற்காக பெற்ற வருமானத்தில் ஒரு பகுதியை அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்ளுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்குவதாக கூறியுள்ளார்.
இது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், “ நான் விளம்பரப் படங்களில் அதிகமாக நடிக்காமல் இருந்தேன். எனினும், சில விளம்பரப் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். தற்போது ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளேன். இந்த விளம்பரத்தில் கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியை மாணவர்ளுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்க முடிவெடுத்துள்ளேன்.
தமிழ்நாட்டில் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக அரியலூர் மாவட்டம் இருந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் மொத்தம் உள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா ரூபாய் 5000 வீதம் 38,70,000 ரூபாயும், தமிழகத்தில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா ரூபாய் 50,000 வீதம் ரூ 5 லட்சமும், 11 செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா 50,000 ரூபாய் வீதம் 5,50,000 ரூபாயும் வழங்க உள்ளேன்.
மேலும், அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் ஹெலன்ஹெல்லர் என்ற செவித்திறன் குறைந்தோர் பள்ளிக்கு ரூ 50,000 வீதம் மொத்தம் 49 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை தமிழக அரசிடம் வழங்க உள்ளேன். அரியலூர் மாவட்டத்தில் இருந்து அதிக மதிப்பெண்கள் எடுத்து மருத்துவராக ஆசைப்பட்டு, அத்தகைய கனவு நிறைவேறாமல் உயிர் நீத்த மாணவி அனிதாவின் நினைவாக இத்தொகையை வழங்குகிறேன் “ என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் இத்தகைய செயலுக்கு ஊடகங்கள், இணையங்கள், சமூக வலைதளங்கள் போன்றவற்றில் மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.