ஆந்திராவின் புதிய தலைநகர் இறுதி வடிவமைப்பில் ராஜமௌலி.

பரவிய செய்தி
ஆந்திராவின் தலைநகர் அமராவதியின் இறுதி வடிவமைப்பில் ராஜமௌலி பங்கேற்க உள்ளார்.
மதிப்பீடு
சுருக்கம்
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியின் இறுதி வடிவமைப்பில் மட்டும் பங்கேற்ப இருப்பதாக இயக்குனர் ராஜமௌலி கூறியுள்ளார்.
விளக்கம்
2014 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் தெலுங்கு மொழி பேசும் ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிந்து ஆந்திரா மற்றும் தெலுங்கான என இரு மாநிலங்களாக உருவாகின. ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிந்தாலும் இரண்டிற்கும் பொதுவான தலைநகராக ஐதராபாத் பத்து ஆண்டுகளுக்கு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆந்திராவின் புதிய தலைநகர் குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதியில் அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியை 20 ஆயிரம் கோடியில் பிரம்மாண்டமாக உருவாக்கத் திட்டமிட்டது ஆந்திரா அரசு. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமராவதி தலைநகருக்கு அடிக்கல்லை நாட்டித் தொடங்கி வைத்தார். புதிய தலைநகரான அமராவதியை பிரமாண்டமாகவும், பழமையானதாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணி உலகின் பல்வேறு நாட்டின் கட்டிடக்கலை நிபுணர்களிடம் இருந்து அதற்கான மாதிரி வடிவங்கள் பெறப்பட்டன. அதில் இங்கிலாந்து நாட்டின் கட்டிடக்கலை நிறுவனமான “ நார்மன் பாஸ்டர் அண்ட் பார்ட்னர்சை “ ஆந்திர அரசு தேர்வு செய்தது.
ஆந்திராவின் தலைநகர் அமராவதியின் மாதிரி வடிவமைப்பை உருவாக்கிய இங்கிலாந்து நிறுவனம் அதை ஆந்திரா முதல்வரிடம் ஒப்புதலுக்காக காண்பித்துள்ளனர். அதைப் பார்த்தப் பின் தலைநகரானது பாகுபலி படத்தில் வரும் அரண்மனை போன்று பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கான ஆலோசனைகளை இயக்குனர் ராஜமௌலிஅவர்களிடம் கேட்கும்படி கூறியதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், தலைநகர் உருவாவதற்கு ஆலோசகர், கண்காணிப்பாளர், வடிவமைப்பாளர் போன்ற பணிகளை மேற்கொள்வார் என்று வதந்திகள் பரப்பப்பட்டன.
இதைத் தொடர்ந்து தன்னைப் பற்றி வெளியாகிய செய்திகள் அனைத்திற்கும் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது ட்வீட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்தார். இருப்பினும், ஆந்திராவின் பிரமாண்ட தலைநகர் அமராவதியின் இறுதி வடிவமைப்பில் சிறு உதவியாக தாம் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ட்வீட்டரில் கூறியுள்ளார். எனவே ஆந்திரா தலைநகர் அமராவதியின் இறுதி வடிவமைப்பில் ராஜமௌலியின் பங்கும் இருப்பது உறுதியாகி விட்டது.