ஆந்திரா முதல்வர் இரு நதிகளை இணைத்து வரலாற்று சாதனை.

பரவிய செய்தி
இரண்டே ஆண்டுகளில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகளுக்கு இடையே 147 கி.மீ தொலைவிற்கு கால்வாய் அமைத்து நதி இணைப்பின் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார் ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு .
மதிப்பீடு
சுருக்கம்
முதல் மற்றும் வேகமான நதிநீர் இணைப்பால் லிம்க்கா சாதனை புத்தகத்தில் சந்திரபாபுவின் பெயர் இடம் பெற்றுள்ளது .
விளக்கம்
இந்தியாவை பொறுத்தவரை நதிநீர் இணைப்பு என்பது வெறும் கனவாகவே இன்றுவரை இருந்து வருகிறது . ஆனால் அதை மெய்யாக்கி சாதனையும் படைத்துள்ளார் ஆந்திர மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் . இந்தியாவில் முதல் முறையாக நதிநீர் இணைப்பு திட்டத்தை தொடங்கி அதில் வெற்றியும் கண்டுள்ளனர் .
ஆந்திர மாநிலத்தில் பாயும் பெரிய நதிகளில் ஒன்று கோதாவரி . மகாராஷ்டிராவில் உருவாகி சத்திஷ்கர் , தெலுங்கானா , ஆந்திரா வழியாக 1426 கி.மீ பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றது . ஆண்டுதோறும் எற்படும் வெள்ளப் பெருக்கால் 3000 டி.எம்.சி நீர் கடலில் வீணாக கலக்கின்றது .
எனவே ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கோதாவரி கிருஷ்ணா நதிகளை இணைக்க பட்டிசீமா திட்டத்தை ஜனவரியில் அறிவித்து 1400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தார் . இதன் மூலம் போலாவரம் கால்வாய் திட்டத்தின் கீழ் முடிவு பெறாத 34 கி.மீ தூரத்திற்கு நிலங்களை கையகப்படுத்த 700 கோடி ரூபாய் தனியாக ஒதுக்கினார் .
இத்திட்டத்தின்படி பட்டிசீமாவில் குழாய்கள் பதித்து , கோதாவரி ஆற்றில் இருந்து மோட்டார்கள் மூலமாக தண்ணீரை இறைத்து 3.9 கி.மீ தூரம் பூமிக்கடியில் உள்ள குழாய்களின் வழியாக கொண்டு செல்லப்பட்டு போலாவரம் கால்வாயில் விடப்படும் . முதற்கட்டமாக 8500 கனஅடி வீதம் தண்ணீர் இறைக்கப்பட்டு கால்வாய் மூலம் கிருஷ்ணா நதியில் சேர்க்கப்படும் . இதனால் கிருஷ்ணா , மேற்கு கோதாவரி மாநிலங்களில் உள்ள 13 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் .
இந்த முதல் மற்றும் மிக வேகமான நதிநீர் இணைப்பு திட்டம் மிகப்பெரிய வரலாற்று சாதனையாகும் . இந்த சாதனை லிம்க்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது . நதிநீர் இணைப்பால் மக்களின் குடிநீர் தேவையும் , விவசாயிகளின் நீர் தேவையும் பூர்த்தி ஆகும் .