This article is from Nov 30, 2017

இணையத்தில் உபயோகிக்கும் மொழிகளில் தமிழ் முதல் இடமா?

பரவிய செய்தி

இந்தியாவில் இணையத்தில் அதிகம் உபயோகிக்கும் மொழிகளில் தமிழ் மொழி முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்று கூகுள் சர்வேயில் தெரியவந்துள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

இணையத்தில் பல சேவைகள் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு பலர் ஆங்கிலத்தை விடுத்து தங்களது மொழியையே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இணையத்தை அதற்கேற்றவாறு மெருகேற்றிப் பயன்படுத்தும் மொழிகளில் தமிழ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

விளக்கம்

கூகுள் நிறுவனம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த முதன்மை புள்ளியல் நிறுவனமான கே.பி.எம்.ஜி-யும் இணைந்து ஓர் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வானது, இணையத்தில் இந்திய மொழிகளின் வளர்ச்சி மற்றும் இணையப் பயன்பாட்டாளர்கள் பற்றி எடுக்கப்பட்டது.

இத்தகைய ஆய்வில், 2011 ஆம் ஆண்டு இணையத்தில் இந்திய மொழிகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 4.2 கோடியாக இருந்தனர். ஆனால், 2016-ம் ஆண்டின் இறுதியில் அதன் எண்ணிக்கையானது 23.4 கோடியாக உயர்ந்துள்ளது. இத்தகைய குறுகியக் காலக்கட்டத்தில் மட்டும் 41 சதவீதம் உயர்ந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 2021-ல் இணையத்தை இந்திய மொழிகளில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 53.6 கோடியாக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .

இந்திய மொழிகளில், இணையத்தை அதற்கேற்றவாறு மெருகேற்றிப் பயன்படுத்தும் மொழிகளில் தமிழ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதில், தமிழ் 42% என்ற புள்ளியை பெற்றுள்ளது. மேலும், ஹிந்தி, கன்னடா, பெங்காலி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகள் தமிழைத் தொடர்ந்து உள்ளன.

இந்தியாவில் ஆங்கிலத்தை விடுத்து தங்கள் மொழியிலேயே இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். இணையத்தில் வரும் விளம்பரங்களை தங்களது மொழியில் பார்பவர்களின் எண்ணிக்கை ஆங்கிலத்தை ஒப்பீடுகையில் அதிகமாகவே உள்ளது. இதில் தமிழ் மொழியானது 97 சதவீதத்துடன் முதலில் உள்ளது.

2021-ல் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் இணையத்தைப் பயன்படுத்துவதில் தமிழ் மற்றும் கன்னட மொழியை பேசுபவர்கள் மற்ற இந்திய மொழிகளில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பர். இதில், தமிழ் மற்றும் கன்னட மொழிகள் 74 சதவீதத்தில் இருக்கும் என்று கூறியுள்ளனர்.

இனி வரும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் புதிதாக இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் 10-ல் 9 பேர் இந்திய மொழியையே பயன்படுத்துவர் என்று ஆய்வில் கூறியுள்ளனர்.

ஆக, இணையத்தை இந்திய மொழிகளில் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் பயன்படுத்துவதில் முதல் இடம் பிடித்த தமிழ் மொழியை, இந்தியாவில் இணையத்தில் அதிகம் உபயோகிக்கும் மொழிகளில் முதல் இடம் பிடித்ததாகத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். இரண்டிற்கும் ஒற்றுமை இருந்தாலும் அர்த்தம் மாறுபடுவதால், இது தவறான செய்தி ஆகும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader