இது சபரிமலை ஐயப்பன் கோவிலின் தோற்றமா ?

பரவிய செய்தி
1947-ல் சபரிமலை ஐயப்பன் கோவிலின் பழமையான தோற்றம்.
மதிப்பீடு
சுருக்கம்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலை சபரிமலை கோவில் என தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
விளக்கம்
கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களின் நகரங்கள், கிராமங்களில் இருந்து பக்தர்கள் இருமுடிக் கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சபரிமலை கோவிலில் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து செல்ல எதுவாக பல்வேறு சீரமைப்பு பணிகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. இதனால் கோவிலின் தோற்றம் மாறிக்கொண்டே வருகிறது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலின் பழமையான தோற்றம் பற்றி பலரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. ஆக, 1947-ல் சபரிமலை ஐயப்பன் கோவிலின் சிறப்பான தோற்றத்தை கண்டு மகிழுங்கள் என்றுக் கூறி வலைதளங்களில் இப்படங்கள் அதிகம் காணப்படுகின்றன.
பெரும்பாலும் வடிவமைக்கப்படும் ஐயப்பன் கோவில்கள், மற்ற கோவில்களில் இடம்பெறும் ஐயப்பன் சன்னதி ஆகியவற்றில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இருப்பது போன்ற வடிவமைப்புகள் மற்றும் 18 படிக்கற்கள் அமைவது எதார்த்தம். அதே போன்று இப்படத்தில் உள்ள கோவிலும் அமைந்துள்ளன.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐயப்பன் கோவில்களை அமைத்து பக்தர்கள் வழிபட்டு வருவதில் முக்கியமானவை சென்னையில் உள்ள ஐயப்பன் கோவில். சென்னை அடையாரின் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவில் ஜனவரி 29, 1982 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. எனினும், இக்கோவிலில் மார்ச் 27, 1994-ல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று முழுவதும் மாற்றப்பட்டது.
ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவில் அமைவதற்கு தேவையான நிலத்தினை செட்டிநாடு குழுமத்தின் ராஜா முத்தையா செட்டியார் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலை 1947-ம் ஆண்டில் சபரிமலை ஐயப்பன் கோவிலின் பழமையான தோற்றம் என்று தவறாகப் புரிந்து கொண்டு பகிர்ந்து வருகின்றனர்.