இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய நிலநடுக்கம் வரப்போகிறதா?

பரவிய செய்தி
2017 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் என்று ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய பூகம்பம் ஒன்று ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தும் என்று முன்னறிவிப்பு செய்வதாக எதிர்காலத்தை உணர்தல் கருத்துடைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிகின்றன. ஆனால் விஞ்ஞானரீதியாக எந்த ஆதாரமும் இல்லை.
விளக்கம்
உலகம் அழியப் போகிறது என்றுக் கூறி பல ஆண்டுகளாக ஏதேனும் செய்திகள் வந்துக் கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் செய்திகளில் குறிப்பிடும் நாட்களை கடந்து உலகம் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. இச்செய்திகள் போன்று தான் இந்தாண்டு இறுதிக்குள் இந்தியப் பெருங்கடலில் பூகம்பம் நிகழும் என்று எச்சரிப்பதும்.
செப்டம்பர் 2017 ல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பாபு கலாயில் என்பவர் அனுப்பியக் கடிதம் மிகவும் வைரலாகியுள்ளது. அக்கடிதத்தில் டிசம்பர் 2017 க்கு முன்னால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று முன்னறிவிப்பு செய்துள்ளார்.
பாபு கலாயில் அனுப்பியக் கடிதத்தில் கூறப்பட்ட முழுவிவரங்கள் யாதெனில், டிசம்பர் 2017 க்குள் இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய நிலநடுக்கம் நிகழும். இந்நிலநடுக்கத்தால் ஆசியக் கண்டத்தின் கடற்கரையோரங்கள் அதிர்வுக்குள்ளாகும், கடற்கரையோர எல்லைகளும் மாற்றம் பெறும். இந்தியா, சீனா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், தாய்லாந்து, ஜப்பான், ஸ்ரீலங்கா மற்றும் அரபு நாடுகள் போன்ற 11 நாடுகள் வரை இது விரிவடையும். நிலநடுக்கம் ஏற்படும் காலத்தில் சுமார் 120KM முதல் 180KM வரை வீசக்கூடிய “ ஷீஷம்மா “ என்ற சக்தி வாய்ந்த புயல் உருவாகும் என்று முன்னறிவிப்பு செய்வதாக கூறியுள்ளார்.
இக்கடிதம் செப்டம்பர் மாதம் B.K RESEARCH ASSOCIATION FOR E.S.P என்ற அமைப்பின் இயக்குனர் பாபு கலாயில் என்பவரிடம் இருந்து வந்துள்ளது. ESP என்பது எதிர்காலத்தை உணர்த்தும் கருத்து ஆகும். இக்கருத்தை விஞ்ஞானத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
எதிர்காலத்தைப் பற்றி இக்கடிதத்தில் முறையாகக் கூறியிருந்தாலும், இதற்கான விஞ்ஞானரீதியாக தகுந்த ஆதாரங்கள் ஏதுமில்லை. நிலநடுக்கங்கள் ஏற்படுவதை முன்கூட்டியே அறிவிக்க இயலவில்லை என்றாலும், சில கணிப்புகள் மூலம் நிலநடுக்கங்கள் பற்றி அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உதவுகின்றன. ஆனால் கலாயில் கணிப்பு எத்தகையது என்று விளங்கவில்லை. இது பற்றி அறிந்துக் கொள்ள பல வலைதளங்கள் அவரைத் தொடர்புக் கொண்ட போது அவரிடம் இருந்து எந்தவித பதில்களும் இல்லை.
எனவே டிசம்பர் 2017 க்குள் இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் என்பது தவறான கருத்து என்று நிரூபணம் ஆனதால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.