இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பிராய்லர் ஆடுகளா ?

பரவிய செய்தி
நாட்டில் அதிகரிக்கும் மரபணு மாற்றப்பட்ட பிராய்லர் ஆடுகள். கிலோ ரூபாய் 250 மட்டுமே. நாட்டு ஆடுகளை அழிப்பதற்கான கார்ப்ரேட் நிறுவனங்களின் அடுத்த திட்டம். பிராய்லர் கோழிகளை அதிகம் சாப்பிடுவதால் நாட்டுக் கோழிகளை எப்படி மறந்தோமோ ! அதே போல் இனி நாட்டு ஆடுகளையும் மறப்போம்.
மதிப்பீடு
சுருக்கம்
ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகம் வளர்க்கப்படும் “ சிரோகி இன ஆடுகள் “ அதிக வெப்பத்திலும், வறட்சியிலும், எளிதில் நோய் தாக்காமலும் வாழக் கூடியவை. தற்போது சிரோகி ஆடுகள் தமிழகத்தின் பண்ணைகளிலும் வளர்க்கப்படுகின்றன.
விளக்கம்
ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்தில் தோன்றிய ஒரு சிறிய நடுத்தர ஆட்டு இனம் தான் சிரோகி ஆடுகள். ” சிரோகி ” ஆடுகள் ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலப் பகுதிகளில் 10 முதல் 200 வரையில் மந்தைகளாக காணப்படுகின்றன. இவ்வகை ஆடுகள் இளம் பழுப்பு, அடர் பழுப்பு மற்றும் அரிதாக வெள்ளை நிறத்திலும் இருக்கின்றன.
சிரோகி இன ஆடுகள் பால் மற்றும் இறைச்சிக்காக அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. ஏனெனில், இவ்வகை ஆடுகள் அதிகளவில் வெப்பத்தைத் தாங்கியும், அதிக வறட்சியிலும், எளிதில் நோய் தொற்றுகள் தாக்காமலும் நன்றாக வளரக்கூடியவை. குறிப்பாக, தரமற்ற மற்றும் கவனிப்பற்ற வளர்ப்பு நிலையிலும் கூட அதிக உடல் எடை மற்றும் பால் சுரப்பு கொண்டதாகவும் காணப்படுகின்றன. சராசரியாக 90% ஆடுகள் ஒற்றைக் குட்டியையும், 10% ஆடுகள் இரட்டைக் குட்டிகளையும் ஈனுகின்றன.
சிரோகி இன ஆடுகளின் முக்கிய இனப்பெருக்க நிலப்பகுதி ராஜஸ்தானின் ஆரவல்லி மலைப் பகுதியாக இருந்தாலும், தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் சிரோகி ஆடுகள் பரவலாக வளர்க்கப்பட்டு வருகின்றன. 2015 ஆம் ஆண்டில், காந்திகிராம பல்கலை வேளாண்மை அறிவியல் மையம் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த விவசாயிக்கு சிரோகி ஆட்டுக்கிடாயை வழங்கியுள்ளனர். நம் பகுதியில் இருக்கும் செம்மறியாடுகளை விட சிரோகி ஆடுகள் அதிக எடையில் காணப்படுகின்றன.
இது குறித்து அறிவியல் மையம் தொழில்நுட்ப வல்லுனர் மாரியம்மாள் கூறியிருந்தது என்னவென்றால், “ கோடைக் காலங்களில் வெள்ளாடுகளில் கழிச்சல் போன்ற நோய்கள் ஏற்படும். அவை சிரோகி ஆடுகளை தாக்காது. ஆறு மாதங்களில் 35 கிலோ எடை வரை வளரக்கூடியவை. எனவே, நம் பகுதியில் உள்ள வெள்ளாடுகளுடன் சிரோகி ஆடுகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து கலப்பின ஆடுகளை உருவாக்க எண்ணியுள்ளோம். இவற்றின் மூலம் உயர்ரக கலப்பின ஆடுகளை உருவாக்க உள்ளோம்.
கலப்பினக் குட்டியில் 70% சதவீதம் சிரோகி பண்பும், 30 சதவீதம் வெள்ளாடு பண்பும் இருக்கும். மேலும், குட்டிகள் ஈனும் போது இறப்புகள் இருக்காது. ஆதலால், படிப்படியாக சிரோகி மற்றும் கலப்பின ஆடுகளை விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம் ” என்று கூறியிருந்தார்.
மரபணு மாற்றப்பட்ட பிராய்லர் ஆடுகள் என்று தவறாகக் கூறிய சிரோகி இன ஆடுகளின் உடலில் காணப்படும் வித்தியாசமான தோற்றங்கள் நிறங்களின் வேறுபாட்டால் உருவானவையே தவிர மரபணு மாற்றத்தால் உண்டானவை அல்ல.