இந்திய இராணுவ வீரர்கள் 42 சீன செயலிகளை பயன்படுத்த தடை.

பரவிய செய்தி
True caller உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய இராணுவ வீரர்களிடம் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
சீன செல்போன்கள் மற்றும் செயலிகள் வாயிலாக ஊடுருவி முக்கிய தகவல்களை அந்நாட்டு உளவு அமைப்புகள் பெற வாய்ப்பு உள்ளதால், சீன நாட்டை சேர்ந்த 42 செயலிகளை இந்திய இராணுவ வீரர்கள் உபயோகிக்க வேண்டாம் என்று இந்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.
விளக்கம்
சிக்கிம் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில், இந்திய ராணுவத்திற்கும் சீன ராணுவத்திற்கும் இடையே நீடித்த போர் பதற்றம் முடிவுக்கு வந்ததில் இருந்து இரு நாடுகளும் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், இந்திய இராணுவ வீரர்கள் மற்றும் துணை இராணுவ வீரர்கள் தங்களது செல்போன்களில் உள்ள சீன செயலிகள் மற்றும் சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று உளவுத் துறை அறிவித்துள்ளது.
ஐக்கிய உளவுத் துறை ஏஜென்சிஸ்களான R&AW மற்றும் NTRO சார்பில் அளித்த அறிக்கையில், இந்தியாவில் செல்போன்கள் வாயிலாக சைபர் தாக்குதல் நடத்துவது எளிதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவில் பயன்படுத்தப்படும் ஆன்ட்ராய்டு மற்றும் IOS செயலிகள் சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை. அவற்றின் மூலம் பயனாளர்களின் தகவல்களை சீன உளவு அமைப்புகளால் எளிதில் பெற வாய்ப்புள்ளது. இது இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்.
மேலும், சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களின் செல்போன்கள் வழியாக ஊடுருவி, இந்திய நிலைகள் பற்றிய தகவல்களை சீன இராணூவ உளவு அமைப்புகளும், பிற உளவு அமைப்புகளும் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்திய இராணுவ வீரர்கள் மற்றும் இந்திய எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களும் தங்களது செல்போன்களில் உள்ள சீன நாட்டு செயலிகளை அழித்து விட்டு புதிய மென்பொருள்களைப் பதிவேற்றம் செய்து பயன்படுத்துமாறு கூறியுள்ளது.
True caller, wechat, weibo, uc news, uc browser, baidu maps, you cam, shareit, beauty plus, vivo video, clean master உள்ளிட்ட 42 சீன செயலிகளை உபயோகிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் பிரபல ஜியோமி செயலிகளான MI Store, MI community, MI Video chat உள்ளிட்டவையும் அடங்கும்.
சீன செயலிகள் வாயிலாக தகவல்கள் கசிவதை தடுப்பதற்கு அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு முன்பு, சீன தயாரிப்பான ஜியோமி செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என்று விமானப்படை தங்களது அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.