This article is from Jan 20, 2018

இந்திய பாஸ்போர்ட்டின் நிறம் காவியாக மாறுகிறதா ?

பரவிய செய்தி

இந்திய பாஸ்போர்ட்டின் நிறம் காவியாக மாற்றப்படுகிறது. இதுநாள்வரை நீல நிறத்தில் இருந்த பாஸ்போர்ட் இனி காவி நிறத்தில் வழங்கப்படும்.

மதிப்பீடு

சுருக்கம்

இ.சி.ஆர்(E.C.R) தகுதி கொண்ட பாஸ்போர்ட்கள் ஆரஞ்சு நிறத்திலும், இ.சி.என்.ஆர்(E.C.N.R) நிலையை கொண்டவர்களுக்கு நீல நிறத்தில் பாஸ்போர்ட் வழங்க உள்ளனர். அனைத்து பாஸ்போர்ட்களும் ஆரஞ்சு நிறத்தில் மாற்றப்போவதில்லை.

விளக்கம்

இந்தியாவில் மூன்று வண்ணங்களில் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

  • அரசு பணி அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளில் அரசு பணிக்கு செல்பவர்களுக்கு வெள்ளை நிறத்திலான பாஸ்போர்ட்.
  • தூதரக அதிகாரிகளுக்கு பழுப்பு சிவப்பு நிற பாஸ்போர்ட்.
  • பொதுமக்களுக்கு அடர்நீல நிறத்திலும் பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.

தற்போது இந்திய வெளியுறவுத்துறை நீல நிறத்தில் இருக்கும் பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கம் இல்லாமலும், பாஸ்போர்ட்டின் நிறத்தை காவி நிறத்திற்கு மாற்றியும் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரஞ்சு நிற பாஸ்போர்ட் : 

ஆரஞ்சு நிறத்திலான பாஸ்போர்ட்கள் இ.சி.ஆர்  தகுதி கொண்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இ.சி.என்.ஆர் நிலையை கொண்டவர்களுக்கு முன்பு போல் நீல நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கப்படும். புதிய நிற பாஸ்போர்ட் இ.சி.ஆர் தகுதியை அடிப்படையாகக் கொண்டது.

இ.சி.ஆர் தகுதி:

குடியேற்றச் சட்டம் 1983ன் படி, பிற நாடுகளுக்கு செல்லும் சில பிரிவினர் குடியேற்ற அனுமதி பெற வேண்டும்.

இனி இரு வகையான பாஸ்போர்ட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும். குடியேற்ற சோதனை தேவைப்படும் இ.சி.ஆர் (E.C.R- Emigration Check Required) பாஸ்போர்ட் மற்றும் குடியேற்ற சோதனை தேவைப்படாத இ.சி.என்.ஆர்(E.C.N.R- Emigration Check Not Required) பாஸ்போர்ட் ஆகும்.

;

குடியேற்றம் என்பது மக்கள் வேலை நிமித்தமாக இந்தியாவை விட்டு வெளியேறி தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளுக்கு செல்வது. குடியேற்றத்திற்கான அனுமதியை பி.ஒ.இ-யிடம் (POE- Protector of emigration) இருந்து பெற வேண்டும். இதில், குவைத், சவூதி அரேபியா, கத்தார், ஆப்கானிஸ்தான், பக்ரைன், புருணை, இந்தோனேசியா, லெபனான், லிபியா, ஜோர்டான், மலேசியா, ஓமன், சூடான், சிரியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 18 நாடுகள் அடங்கும்.

இ.சி.என்.ஆர்(E.C.N.R):

இ.சி.என்.ஆர் பாஸ்போர்ட் பெற தகுதியுடையவர்கள் 14 பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக, வருமானவரி செலுத்துபவர்கள், 18 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டோர், பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் இ.சி.என்.ஆர் பாஸ்போர்ட் பெற தகுதியுடையவர்கள்.

குறைந்த கல்வி பயின்றவர்கள், திறன் குறைந்தவர்கள், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நாட்டில் உள்ள சட்டத்திட்டத்தால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம்  இருப்பதற்காகவும், அதற்கு உதவும் பொருட்டும் இம்முறையை அமல்படுத்துகின்றனர்.

2007 ஆம் ஆண்டிற்கு பிறகு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்களின் இறுதி பக்கத்தில் இ.சி.ஆர் என்று எழுதப்பட்டிருக்கும். இனி இ.சி.ஆர் பாஸ்போர்ட்கள் ஆரஞ்சு நிறத்தில் மாற்றப்படும். 2012-ம் ஆண்டிற்கு பின் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்களின் தகவல்கள் அனைத்தும் அரசு கணினித் தகவல் தரவில் சேமிக்கப்பட்டுள்ளது. எனவே, சோதனையின் போது “ பார்கோர்டை ஸ்கேன் ” செய்கையில் எளிதாக விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

ஆகையால், குடிமக்களின் விவரங்களை பாதுகாக்கும் முயற்சியாக பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கத்தை நீக்கப்படும் என்று வெளியுறத்துறை விசா பிரிவு கொள்கை மற்றும் சட்ட விவகாரங்கள் துறை துணை செயலாளர் சுரேந்தர் குமார் தெரிவித்துள்ளார்.

இதனால், இனிமேல் பாஸ்போர்ட்டை ஒரு அடையாள அட்டையாக மக்கள் உபயோகிக்க முடியாத நிலை உருவாகலாம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader