இராமேஸ்வரத்தில் 1212 தூண்கள் ஒரே நேர்க்கோட்டில் சீராக கட்டப்பட்ட ஆச்சரியம்!

பரவிய செய்தி
1740 ஆண்டுகளுக்கு முன்பு இராமேஸ்வரம் கோவிலில் 1212 தூண்கள் ஒரே நேர்க்கோட்டில் சீராக கட்டப்பட்டுள்ளது. இந்திய பொறியாளர்களின் திறமைக்கு இது ஒரு முன்னுதாரணம் என மேல் உள்ள புகைப்படம் பரவியது .
மதிப்பீடு
சுருக்கம்
இராமேஸ்வரம் கோவிலில் இருப்பதாகக் கூறும் இத்தூண்கள், மத்திய பிரதேசம் மந்து என்னும் பகுதியில் உள்ள ஹோஷங் ஷா கல்லறையில் அமைந்துள்ளன.
விளக்கம்
இந்தியாவில் புகழ்பெற்ற வழிபாட்டு தலமான இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலில் 1740 வருடங்களுக்கு முன்பே 1212 தூண்கள் ஒரே நேர்க்கோட்டில் சீராக அமைந்தவாறு கட்டப்பட்டுள்ளது. இது இந்திய பொறியாளர்களின் திறமைக்கு முன்னுதாரணம் என்றுக் கூறி பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் இப்படங்கள் பரவி வருகிறது.
இதைத் தொடர்ந்து, ஜனவரி 22-ம் தேதி துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரான குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில்இப்படத்தை பகிர்ந்து கருத்துகளை பதிவிட்டுள்ளார். இப்பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.
1212 தூண்கள் ஒரே நேர்க்கோட்டில் சீராக ஒரு புள்ளியில் முடிவது போன்று காட்சியளிக்கும் படங்கள் இராமேஸ்வரம் கோவிலை சேர்ந்தவை அல்ல. இத்தூண்கள் மத்திய பிரதேசம், மந்து பகுதியில் உள்ள ஹோஷங் ஷா ( Hoshang Shah’s) கல்லறையில் அமைந்துள்ளன.
ஹோஷங் ஷா கல்லறை 15 ஆம் நூற்றாண்டில்( கி.பி.1440) முதன் முதலாகப் பளிங்கு கற்களை கொண்டு கட்டப்பட்டவை. இக்கல்லறை அமைந்துள்ள தற்போதைய மத்திய பிரதேசத்தின் மால்வா மாகாணம், பழங்கால இந்து நகரமான தார்-ரின் தலைநகராக திகழ்ந்தது. இப்பகுதி மந்து நகருக்கு 24 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த மசூதி கி.பி 1305 ஆம் ஆண்டு சுல்தான் அலாவுதீன் கில்ஜி டெல்லியை வெற்றிக் கொண்டதை பிரதிபலிக்கின்றது. அற்புதமாக பளிங்கு கற்களை கொண்டு உருவான இந்த மசூதி, ஷாஜகான் தாஜ்மஹால் அமைப்பதற்கு தூண்டு கோலாக அமைந்ததாகவும், இதன் கட்டிடக்கலை அவரை மிகவும் கவர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய மசூதி முதல் முறையாக பளிங்கு கற்களை கொண்டு ஆப்கானிய கட்டிடக்கலையில் இந்தியாவில் நிறுவப்பட்டவை ஆகும். இதனுள் இந்து கோவில்களில் உள்ளது போன்று தூண்களும் அமைந்துள்ளன. ஹோஷங் ஷா மால்வாவின் இரண்டாவது அரசர் ஆவார். 27 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இவரின் கல்லறை மத்தியப்பிரதேசம் மந்துவில் அமைந்துள்ளது.
மசூதியில் உள்ள தூண்களை சிறிது போட்டோஃஷாப் செய்து இராமேஸ்வரம் கோவிலில் அமைந்துள்ள தூண்கள் என்று வதந்தியை பரப்பி வருகின்றன.
வலைதளத்தில் பரவிய படங்கள் இராமேஸ்வரத்தை சேர்ந்தவை இல்லையேனினும், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலின் வெளிப்புறப் பிரகாரத்தில் 1212 தூண்கள் நேர்த்தியாக அமைந்துள்ள காட்சியை படத்தில் காணலாம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த கட்டிடக்கலையின் சிறப்பை இக்கோவிலின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
இராமேஸ்வரம் கோவில் தோன்றிய காலம் குறித்து பல்வேறு கதைகள் கூறினாலும், அதற்கான உண்மையான ஆதாரங்கள் ஏதுமில்லை. எனினும், மூவேந்தரில் ஒருவரான பாண்டியரின் ஆட்சி காலத்தில் ( 9 நூற்றாண்டில்) இராமேஸ்வரம் கோவில் இருந்தற்கான குறிப்புகள் உள்ளன.