உங்கள் முதல்வர் எப்படி? குற்ற வழக்கு உள்ளவரா, பணக்காரரா, ஏழையா ?

பரவிய செய்தி

இந்தியாவில் குற்ற வழக்குடன் உள்ள மாநில முதல்வர்களின் பட்டியிலில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 22 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

மதிப்பீடு

சுருக்கம்

ஏ.டி.ஆர் ஆய்வு தகவலின்படி, நாட்டில் மொத்தமுள்ள 31 முதல்வர்களில் 11 முதல்வர்களின் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன என்று தெரியவந்துள்ளது.

விளக்கம்

ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில், இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் உட்பட மொத்தமுள்ள 31 முதல்வர்களின் மீது உள்ள வழக்குகள், அவர்களின் சொத்து விவரங்கள், படிப்பு பற்றிய முழுத் தகவல்களும் வெளிவந்துள்ளன. இந்த ஆய்வு அறிக்கை, சட்டசபைத் தேர்தலின் போது அளித்த சுயநிர்ணய உரிமை வாக்குமூலத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் மொத்தமுள்ள 31 முதல்வர்களில் 11 முதல்வர்களின் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதாவது 35 சதவீத பேர் தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளது என்றே தெரிவித்துள்ளார்கள். 26 சதவீத முதல்வர்களின் மீது கொலை, கொலை முயற்சி, மோசடி, நேர்மையற்ற முறையில் சொத்துகளை விநியோகம் செய்தல், பறிமுதல் செய்தல், அச்சுறுத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

குற்றவியல் வழக்குகள் அதிகம் உள்ள முதல்வர்களின் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 22 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவரின் மீது தாக்குதலை தூண்டிவிடுதல், தாக்குதலில் பங்கேற்றது (IPC SECTION-134) , ஆயுதம் கொண்டு துன்புறுத்தியது (IPC SECTION-324) என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரைத் தொடர்ந்து கேரளா முதல்வர் பிரனாயி விஜயன்(11), டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்(10) வழக்குகளுடன் இடம்பெற்றுள்ளனர்.

முதல்வர்களின் கல்வித்தகுதி :

 மொத்தம் உள்ள 31 முதல்வர்களில் 3 பேர்  ப்ளஸ் டூ முடித்தவர்கள், 12 பட்டதாரிகள், 10  பேர் தொழிற்சார்ந்த பட்டதாரிகள், 5 பேர் முதுகலைப் பட்டதாரிகள், ஒருவர் மட்டும் முனைவர் பட்டம் பெற்றவர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பணக்கார முதல்வர் :

 இந்திய மாநிலங்களின் முதல்வர்களில் 81% பேர் கோடிஸ்வரர்கள் ஆவர். நாட்டிலேயே அதிக சொத்து மதிப்புடைய முதல்வர்களின் பட்டியலில் ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு 177 கோடியுடன் முதலிடத்தில் உள்ளார்.

அதிக சொத்து மதிப்புடையவர்கள் குறைவான சொத்து மதிப்புடையவர்கள்
சந்திரபாபு நாயுடு – 177 கோடி மாணிக் சர்க்கார் – 27 லட்சம்
பெமா காண்டு – 129  கோடி மம்தா பானர்ஜி – 30 லட்சம்
அம்ரிந்தர் சிங் – 48  கோடி மெஹாபூபா முஃப்தி- 55 லட்சம்

குறைவான சொத்து மதிப்பு கொண்டவர்களில் திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சர்க்கார் முதலிடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 27 லட்சம் மட்டுமே.

இந்த பட்டியலில் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ரூ.7.80 கோடி சொத்து மதிப்புடன் 12 வது இடத்தில் உள்ளார்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button