உயிருக்கு போராடிய பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தலா ?

பரவிய செய்தி
மும்பை எல்பின்ஸ்டோன் ரயில் நிலைய மேம்பாலத்தின் விபத்தில் உயிருக்கு போராடிய பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.
மதிப்பீடு
சுருக்கம்
ரயில் நிலைய மேம்பாலத்தின் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபத்தில் உயிருக்குப் போராடிய பெண்ணிற்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது என்று வெளியான செய்தி தவறானது என்று தி ஹிந்து நாளிதழ் மன்னிப்புக் கேட்டுள்ளது
விளக்கம்
மும்பை எல்பின்ஸ்டோன் ரயில் நிலைய நடைமேம்பாலத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் இறந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்த நிலையில், கூட்டத்தில் உயிருக்கு போராடிய பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீடியோ காட்சிகள் வெளியாகின என்றுக் கூறி பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
கடந்த மாதம் 29-ம் தேதி மும்பையில் கனமழை பெய்த போது புறநகர் பகுதியான எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தின் நடைமேம்பாலத்தில் மழைக்காக மக்கள் நின்றுக் கொண்டிருந்தனர். அப்போது மின்கசிவு ஏற்படுவதாகக் கூறிய வதந்தியால், மக்கள் தங்களை காத்துக்கொள்ள வேகமாக படிக்கட்டுகளில் சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியாகினர், 38 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி பலத்த காயமடைந்த பெண் உயிருக்கு போராடிய நிலையில் உதவிக்கு கையை நீட்டும் போது, ஒருவர் அப்பெண்ண காப்பாற்றாமல் பாலியல் துன்புறுத்தல் செய்த காட்சி வீடியோவில் பதிவாகின என்றும், கூட்டத்தில் சிக்கிய பெண்களிடம் நகைகள், பொருட்கள், பணங்கள் போன்றவற்றை சிலர் திருடியதாகவும் தி ஹிந்து உள்ளிட்ட பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இச்சம்பவம் மக்களிடையே பேரதிர்ச்சி உருவாக்கியது.
ஆனால், உயிருக்கு போராடிய பெண்ணிற்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாகக் இணையத்தில் கூறப்படும் செய்திகள் அனைத்தும் தவறானவை. கூட்ட நெரிசலில் மாட்டிக் கொண்டவர்களை சிலர் காப்பாற்றும் தருணத்தில் உயிருக்கு போராடியப் பெண்ணை காப்பாற்றும் நோக்கத்தில் உதவிய காட்சிகளை தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளனர்.
இதை உணர்த்தும் வகையில் பிரபல நாளிதழான தி ஹிந்து தனது இணையப் பக்கத்தில், “உயிருக்கு போராடிய பெண்ணிற்கு பாலியல் துன்புறுத்தலின் வீடியோ காட்சிகள்” என்ற தலைப்பில் வெளியான விபத்தில் உயிருக்கு போராடிய பெண் பாலியல் துன்புறுத்தல் ஆளாகியதாக வீடியோ காட்சிகள் தெரிவிக்கின்றன என்று கூறப்பட்ட செய்தியானது தவறானது ஆகும். அவ்வாறு கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே அவ்வாறு செய்திகள் வெளியிட்டதுக்கு மன்னிப்பு கேட்குக் கொள்கிறோம். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட செய்தியானது ஹிந்துவின் அனைத்து வலைதளத்திலிருந்தும் நீக்கப்படும் என்று தி ஹிந்துவின் ஆசிரியர் கூறியுள்ளார்.
உதவி செய்வதைக் கூட தவறானச் செய்திகளாகப் பரப்பி உதவிக்கு வருபவர்களைக் கூட இழிவுபடுத்துவது முறையற்றதாகும்.