உயிர்க் காக்கும் 51 மருந்துகள் விலையைக் குறைத்தது என்.பி.பி.ஏ.

பரவிய செய்தி
இந்தியாவின் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையமான NPPA 51 மருந்துகளின் அதிகபட்ச விலையை 6 முதல் 53 சதவீதம் வரையில் குறைத்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு தேவையான பல்வேறு மருந்துகளின் விலையானது குறைந்திருக்கிறது.
மதிப்பீடு
சுருக்கம்
புற்றுநோய், இருதய நோய், தோல் நோய் போன்றவற்றின் சிகிச்சைக்கு வழங்கப்படும் 51 மருந்துகளின் அதிகபட்ச விலையை தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையமான என்.பி.பி.ஏ நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது
விளக்கம்
இந்தியாவில் பல்வேறு நோய்களுக்கு தேவையான மருந்துகளின் விலையை ஒழுங்குப்படுத்தும் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் (NPPA) உயிர்க் காக்கும் 51 மருந்துகளின் விலையைக் குறைத்துள்ளது. மருந்துத்துறையைச் சேர்ந்த என்.பி.பி.ஏ ஆணையம் மத்திய வேதிப் பொருட்கள் மற்றும் உரங்கள் தொடர்பான அமைச்சரவையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த ஆணையம், 1997 ஆம் ஆண்டில் இருந்து மருந்து பொருட்களின் விலையை கண்காணிப்பதும், ஒழுங்குப்படுத்தும் பணியையும் செய்து வருகின்றது.
கடந்த நவம்பர் 24-ம் தேதி வெளியான என்.பி.பி.ஏ-வின் அறிக்கையின் படி, புற்றுநோய், இருதய நோய், தோல் நோய் ஆகியவற்றின் சிகிச்சைக்கு வழங்கப்படும் 51 மருந்துகளின் அதிகபட்ச விலையை 6 முதல் 53 சதவீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 23 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் சில்லறை விலையையும் நிர்ணயம் செய்துள்ளது.
2013-ம் ஆண்டு மருந்து விலை குறைப்பு விதி பிரிவு 1-ன் கீழ் விலையை நிர்ணயம் செய்துள்ளனர். ஆக, 36 வகையான மருந்துகளுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்தும், 15 வகையான மருந்துகளின் விலையை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து விலை குறைப்பை ஏற்று மருந்து நிறுவனங்கள் மருந்துகளின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று என்.பி.பி.ஏ கேட்டுக் கொண்டுள்ளது.
இதில், புற்றுநோய் சிகிச்சைக்கான ஆக்ஸாலிபிளாடின் ஊசி மருந்து, தட்டம்மை, ரூபெல்லா, ஜப்பானிய மூளை வீக்கம் போன்ற நோய்களுக்கான மருந்துகளின் அதிகபட்ச விலை நிர்ணயம் செய்துள்ளனர். மேலும், சேவபுளூரேன், பைட்டோமெனடியோன், காசநோய் நோய் தடுப்பான பிசிஜி ஆகியவற்றின் விலையையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.