எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும்: ஆந்திர அரசு புதிய திட்டம்

பரவிய செய்தி

ஆந்திராவில் அரசு பிரதிநிதிகளின் குழந்தைகள் கட்டாயமாக அரசு பள்ளிகளில் மட்டுமே பயில வேண்டுமென சட்டம் கொண்டுவர உள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

ஆந்திராவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் நவீனமயமாக்கப்பட்ட பின் இச்சட்டத்தை அமல்படுத்த உள்ளனர். தற்போது இதற்கான சட்ட வரைவை மட்டும் தயார்படுத்தி வருகின்றனர்.

விளக்கம்

ஏழை மக்களின் குழந்தைகள் மட்டுமே அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளின் தரம் குறைவாக இருப்பதினால் மக்கள் தனியார் பள்ளிகளை நாடிச் செல்கின்றனர். இதை பயன்படுத்தி தனியார் பள்ளிகளும் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனர்.

இதை மாற்றியமைக்க, அரசு பிரதிநிதிகளின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் மட்டுமே பயில வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டுவர ஆலோசித்து வருகிறது ஆந்திர அரசு. இச்சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், ஆந்திர அரசு தலைமையின் கீழ் செயல்படும் எம்.எல்.ஏக்கள். எம்.சிக்கள், அமைச்சர்கள் ஆகியோரின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் மட்டுமே பயில வேண்டும் என்று கட்டாயமாக்கப்படும்.

இது குறித்து பேசிய ஆந்திரா சுற்றுலா துறை அமைச்சர் பூமா அகிலா, அனைவருக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பது முதல்வரின் கனவு. அதனை நிறைவேற்ற, அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் தரம் உயர்த்தி நவீனமயமாக்கப்பட்டு தரமான கல்வி வழங்கப்படும்.

இதற்கான சட்ட வரைவை மட்டுமே தற்போது தயார்படுத்தி வருவதாகவும், இந்த சட்டம் அமலுக்கு வருவதற்குள் அனைத்து அரசு பள்ளிகளும் நவீனமயமாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடினார் என்றும் கூறியுள்ளார்.

என்.ஆர்.ஐ தெலுங்கு சமூகத்தின் உதவியுடன் ஆந்திர அரசு மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளின் சூழலை மேம்படுத்த உள்ளது. இவ்வருடத்தின் இறுதிக்குள் மாநிலத்தில் உள்ள 5,000 அரசு பள்ளிகளை என்.ஆர்.ஐ-ஸ் உதவியுடன் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் ஆந்திர அரசின் கீழ் செயல்படும், 13 மாவட்டங்களில் உள்ள 9,000 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் போதிய மாணவர்கள் இல்லாத காரணத்தினால் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

அரசு தலைமையில் உள்ளவர்களின் குழந்தைகள் மட்டுமின்றி அரசு பணியில் உள்ள அனைவரது குழந்தைகளும் கட்டாயம் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் ஓர்  சட்டம் அமல்படுத்தினால், நாட்டில் உள்ள பல அரசு பள்ளிகளின் தரம் உயர்வதோடு ஏழை குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button