கமல்ஹாசனின் மய்யம் தளம் கிறிஸ்தவ மிசினரி பெயரில் உள்ளதா?

பரவிய செய்தி

கமல்ஹாசனுக்கு சொந்தமான கிறஸ்துவ மீடியா மையமானது கேமன் தீவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் நிதி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

கமலின் மக்கள் நிதி மய்யத்தின் இணைய முகவரி maiam.com ஆகும். ஆனால், கேமனில் பதிவு செய்யப்பட்ட கிறஸ்துவ மீடியா மையம் என்று குறிப்பிட்ட இணைய முகவரி maiyam.com. அடிப்படை குற்றச்சாட்டே தவறு .

விளக்கம்

தமிழக அரசியலில் களமிறங்கிய நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் மற்றும் ஊடகங்களில் மட்டுமே கருத்துகளை தெரிவித்து வந்தார். அதன் பின் மக்களின் குறைகளை கேட்பதற்காக “ விசில் மையம் ” என்ற இணையதளத்தை தொடங்கினார். கமல்ஹாசனின் தீவிர அரசியலின் முன்னோட்டமாக மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் “ மக்கள் நீதி மய்யம் ” என்ற தனது கட்சியின் பெயரையும், கட்சி கொடியையும் அறிமுகம் செய்து கொள்கை குறித்து பேசினார்.

கமல்ஹாசனின் அரசியல் பயணத்தின் தொடக்கத்திலேயே பல்வேறு சர்ச்சைகள், எதிர்ப்புகள், இந்து விரோதி என்றெல்லாம் பல பிரச்சனைகள் உருவாகின. தற்போது அதிமுகவைச் சேர்ந்த ஹரி பிரபாகரன் கமலின் மீது புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

அதிமுகவின் தொழில்நுட்பப் பிரிவின் இணை செயலாளர் ஹரி பிரபாகரன் தன் ட்விட்டர் பக்கத்தில், “ கமல் கட்சியின் இணையதளம் Maiyam.com கேமன் தீவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் 47, எல்டாம்ஸ் சாலையில் கமலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கிறஸ்துவ மீடியா மையம் என்ற நிறுவனம் தென்னிந்தியாவில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களின் இணையதளங்களை கையாண்டு வருகிறது. இது கமலின் எல்டாம்ஸ் சொத்து ஆகும் என்று பதிவிட்டுள்ளார். 

மேலும், இந்நிறுவனத்திற்கு 2016-2017  ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து நிதி கிடைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் கவுதமி என்றும் கூறியுள்ளார்.

மய்யம் இணையதளம் maiam.com மற்றும் அதில் “ Y ” என்ற எழுத்து வராது. இது சட்டப்படி இந்தியாவில் பதிவு செய்யப்பட்டது. கேமனில் பதிவு செய்யப்படவில்லை. கமலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் பெயர் Maiam.com தவிர Maiyam.com அல்ல. 

கமல் நிர்வாக இயக்குனராக இருப்பதாகக் கூறி Maiyam.com என்ற இணையதளத்தின் WHOIS தகவல்கள் மூலம் அந்த இணையதளத்தின் உரிமையாளர் பெயர், முகவரி, தொலைபேசி, டொமைன் பெயர் பற்றி அறியும் வாய்ப்புள்ளது என்று பிரபாகரன் கூறியுள்ளார். அதில், தான்  GRAND CAYMAN என்று இடம்பெற்றுள்ளது.

எனினும்,  பதிவு செய்யப்பட்டவரின் பெயரில் ” PRIVACYDOTLINK CUSTOMER 2802196 ” என்றே உள்ளது. PRIVACYLINK பற்றி கூகுளில் தேடுகையில்,  WHOIS தகவலின்படி ஒரு இணையதளத்தின் முகவரி, உரிமையாளர் பெயர், தொலைபேசி, டொமைன் பெயர் என அனைத்து விவரங்களையும் உலகில் எங்கிருந்தும் காண இயலும். எனவே, PRIVACYLINK என்னும் உரிமையாளர் பற்றிய தகவல்களை மறைக்கும் சேவையுடன் பதிவு செய்யும் போது  Unregistrar corp என்ற நிறுவனம் FREE WHOIS PROXY  என்ற சேவையை வழங்குகிறது.

மேலும், privacy link மற்றும் seven mile beach என்பதை வைத்து தேடுகையில், கேமன் தீவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Uniregistrar corp, 2012-ல் தோற்றுவிக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. அந்நிறுவனம் பற்றிய தகவல்களும் கிடைத்துள்ளது. இதனால், கமலின் மய்யம் இணையதளம் கேமன் தீவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அது கிறிஸ்துவ மீடியா மையம் என்ற பொருந்தாத செய்தியை கூறியுள்ளார். 

ஆக, தவறான தகவலின் மூலம் கமல்ஹாசன் மீது குற்றம் சுமத்தியுள்ளனர் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button