கர்நாடகாவை கன்னடர்களே ஆள வேண்டுமா! பிரகாஷ் ராஜ் முழு விளக்கம்

பரவிய செய்தி
கர்நாடகத்தில் கன்னடர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு ஆட்சி புரியும் வாய்ப்பை வழங்கக்கூடாது. மேலும், தேவைபட்டால் நான் அரசியலுக்கு வரவும் தயார் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியுள்ளார்.
மதிப்பீடு
சுருக்கம்
தகுதி வாய்ந்தவர்கள் எந்த மாநிலத்திற்கும் தலைவர் ஆகலாம். பெங்களூர் பத்திரிகை மன்றத்தில் தான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.
விளக்கம்
“ தமிழகத்தை தமிழர் தான் ஆள வேண்டும் ” என்ற முழக்கம் நீண்ட நாட்களாக தமிழகத்தில் உள்ள தமிழ் தேசிய இயக்கவாதிகளின் கொள்கையாக இருந்து வருகிறது. ஆனால், இத்தகைய கூற்றை ஏற்க இயலாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்திருந்தார். தகுதி வாய்ந்த நபர்கள் நாட்டில் உள்ள எந்த மாநிலத்திற்கும் தலைவராகலாம் என்று பேட்டி அளித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய பிரகாஷ் ராஜ், கர்நாடகாவை கன்னடகர்களை தவிர மற்றவர்கள் ஆட்சி புரிய வாய்ப்பு வழங்கக்கூடாது என்றும், அவசியம் ஏற்பட்டால் அரசியலுக்கு வரத் தயார் என்றும் கூறியதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவால் பலரும் பிரகாஷ் ராஜ்-க்கு எதிராக கடுமையான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் கூறி வருகின்றனர்.
பெங்களூர் பத்திரிகை மன்றத்தில் இவ்வருடத்தின் சிறந்த மனிதர் என்ற விருதை பெற்றுக்கொண்ட பிரகாஷ் ராஜ் கூறியதாவது, கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் வகுப்புவாத அரசியல் வலுபெற்று வருகின்றது. நாம் நாட்டில் உள்ள சர்வாதிகார மற்றும் பெருபான்மை அரசியல்வாதிகள் ஹிட்லரின் சிந்தனை போன்று ஒரு பிரதேசத்தின் மூலம் நாட்டையே கட்டுக்குள் கொண்டுவர எண்ணுகின்றனர் ஆனால் உணர்ச்சிமிக்கவர்களாகிய நாம் அதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். என்னை அரசியலில் களமிறங்க யாரெனும் சவால் விடுத்தால், அதற்கும் நான் தயார் என்று கூறினார்.
உடனடியாக குறிப்பிட்ட கட்சியை மட்டும் எதிர்த்து தான் இவ்வாறு கூறவில்லை என்றும், நான் எப்போதும் வகுப்புவாத மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிராக இருப்பவர்களுக்கு துணை நிற்பேன் என்றும் கூறினார். மேலும், “ வகுப்புவாத சக்திகள் பிரிவினைவாத கலவரங்களின் மூலம் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க எண்ணுவர். ஆனால், அத்தகைய பிரிவினைவாத சக்திகளுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். நாம் அனைவரது வீடுகளுக்கும் சென்று அவர்கள் பற்றி எடுத்துரைத்து வரும் தேர்தலில் அவர்களை தோற்கடிக்க உதவி செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும் என்று விளக்கமளித்திருந்தார் ”.
பிரகாஷ் ராஜ் தனது சர்ச்சையான கருத்து குறித்து ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது யாதெனில், பெங்களூர் பத்திரிகையில் நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும், “தகுதி வாய்ந்த நபர்கள் நாட்டின் எந்தவொரு மாநிலத்திற்கும் தலைவராகலாம் என்பதே இந்தியனாக தனது நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டிருந்தார். எந்த மாநிலமாக இருந்தாலும், வகுப்புவாத அரசியல்வாதிகளை வரும் தேர்தலில் வெற்றி பெற விடமாட்டோம் என்று கூறினேன். தனது பேச்சை திரித்து தவறாக பரப்புரை செய்து தனக்கெதிரான வெறுப்புணர்வை தூண்டுவதன் மூலம் பயம் மற்றும் விரக்தி மனநிலையே உறுதிபடுத்துகின்றீர்கள் என்று கூறியுள்ளார் “.