This article is from Nov 29, 2017

காதலனே காதலிக்கு விஷம் கொடுத்து கொன்ற அவலம்.

பரவிய செய்தி

ஊட்டியில் ரம்யா என்ற 16 வயது பெண்னை அவளது வீட்டிற்கு அருகில் இருக்கும் பையனும் அவனது நண்பர்களும் சேர்ந்து கூட்டு வன்புணர்வு செய்தபின் கொலை செய்துள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

ரம்யாவும் அவளது காதலனும் இணைந்து தற்கொலை செய்ய முடிவெடுத்து விஷம் அருந்திய போது அப்பெண் மட்டும் உயிரிழந்தார். காதலன் அங்கிருந்து தப்பி மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளான்.

விளக்கம்

ஊட்டியில் நடந்த பேரதிர்ச்சி தரும் சம்பவம், ரம்யா என்ற ஊட்டியை சேர்ந்த 16 வயதுடைய பெண்ணை ஐந்து பேர் கூட்டு வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளார்கள் என்றுக் கூறி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

 நீலகிரி மாவட்டம் கீழ் நாடுகாணி என்ற பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவரின் மகள் ரம்யா. அப்பகுதியை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையில் ஒருநாள் பள்ளிக்கு சென்ற பெண் திரும்பி வரவில்லை என்று அனைத்து இடங்களிலும் தேடியுள்ளனர். அதன் பின்னர் மாயமான பெண் தமிழக கேரளா எல்லையில் உள்ள ஓர் தேயிலைத்தோட்டத்தில் விஷம் அருந்திய நிலையில் சடலமாக உள்ளார் என்று அப்பகுதியின் அரசு மருத்துவமனையில் இருந்து வந்த தகவலை அடுத்து உடலை கண்டுபிடித்தனர். பெண்ணின் இறப்பை பற்றி வந்த தவறான செய்தியை அடுத்து பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

   girl suicide

   அப்பெண்ணின் உடல் இருந்த இடத்தைச் சுற்றிச் செடிகளுக்கு அடிக்கக் கூடிய கொடிய மருந்தும், அதைக் கலந்து குடித்த தண்ணீர் பாட்டிலும் கிடைத்தன. காவல் துறையின் விசாரணையில், தகவல் கொடுத்த நபர் அப்பெண்ணின் காதலன் எனவும், அதே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் எனவும் தெரியவந்தது.

  இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதாலும், பள்ளி மாணவர்கள் என்பதாலும் பெற்றோர்கள் அவர்களது காதலுக்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் பள்ளி முடிந்த பின் மாணவியை அழைத்து சென்ற காதலன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று அப்பெண்ணின் மனதை மாற்றி உள்ளான். ஆகையால், மாணவிக்கு விஷம் கலந்த தண்ணீரை கொடுத்து குடிக்கும்படி கூறி, அவனும் சிறிது விஷத்தை அருந்தும் நேரத்தில் மாணவி வலியால் துடிப்பதை கண்டு பயந்து அங்கிருந்து ஓடி மருத்துவமனையில் அனுமதியாகி உள்ளான். மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாவமாக இறந்துள்ளார். இதைத் தொடர்ந்து காதலனின் மீது காவல்துறையினர் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

  உணர்வைத் தூண்டிவிடும் நோக்கத்தில் நாட்டில் பல சம்பவங்களை பொய்யான செய்திகளுடன் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றன. தவறான செய்திகளை கொண்டு பெண்களின் இறப்பை கொச்சைப்படுத்துவது இழிவான செயலாகும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader