காந்தியும் தலாய்லாமாவும் இருக்கும் அரியப் புகைப்படமா ?

பரவிய செய்தி
மகாத்மா காந்தியுடன் குழந்தையாக இருக்கும் தலாய்லாமா எடுத்துக் கொண்ட அரியப் புகைப்படம்.
மதிப்பீடு
சுருக்கம்
தனது வாழ்நாளில் காந்தியை நேரில் சந்தித்தது இல்லை, ஆனால் அவரை ஒரு முறை மட்டும் தனது கனவில் சந்தித்தாக தலாய்லாமா அவர்கள் சர்வதேச மாநாட்டில் கூறியுள்ளார்.
விளக்கம்
அகிம்சையின் மீது கொண்ட அன்பால் இந்தியாவின் தேசத்தந்தை என்று அன்போடு அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களின் வாழ்கையில் உண்மையில் நடக்காத நிகழ்வுகளுடன் தொடர்படுத்தி இணையங்களில் படங்களுடன் செய்திகள் வருவது வழக்கம். அவ்வாறு நடக்காத நிகழ்வுகளை மையப்படுத்தி வந்த செய்திகளில் ஒன்று தான் சிறுவயது தலாய்லாமா காந்தியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் என்று நாம் அனைவரும் கண்ட படங்கள்.
திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா அவர்கள் தனது வாழ்நாளில் ஒரேயொரு முறை மட்டுமே மகாத்மா காந்தியை பார்த்ததாகக் கூறியுள்ளார்.
2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சத்தியாகிரகத்தின் நுற்றாண்டு சர்வதேச மாநாட்டின் போது உரையாற்றிய தலாய்லாமா, என் வாழ்நாளில் மகாத்மா காந்தி அவர்களை நேரில் சந்தித்ததில்லை, ஆனால் ஓர் குளிர்காலத்தின் போது லஹசாவில் அமைந்துள்ள போதலா அரண்மனையில் கனவில் சந்தித்துள்ளேன். பெளத்தர்களாகிய நாங்கள் மறுபிறப்புக் கோட்பாட்டில் நம்பிக்கைக் கொண்டுள்ளோம். எனவே என்னுடைய முந்தைய வாழ்நாளில் மகாத்மா காந்தியுடன் தொடர்பைக் கொண்டிருப்பதாக உணர்கிறேன் என்று கூறினார்.
மகாத்மா காந்தியை தனது வாழ்நாளில் தலாய்லாமா அவர்கள் ஒரு முறை கூட சந்தித்ததில்லை என்பது ஆவர் ஆற்றிய உரையிலிருந்தே தெரிய வருகிறது. எனவே சிறுவயது தலாய்லாமா காந்தியுடன் எடுத்துக் கொண்ட படங்கள் என்று இணையத்தில் நாம் பார்க்கும் படங்கள் அனைத்தும் பொய்யானவை என்பது தெளிவாகிறது. மேலும், அப்படமானது காந்தியின் முழுநீளப் படம் மற்றும் தலாய்லாமாவின் சிறுவயது படம் ஆகிய இருவேறு படங்களை போட்டோஷாப் மூலம் இணைத்து வெளியிடப்பட்டவை ஆகும்.
1959 ஆம் ஆண்டில் திபெத்திலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா அவர்கள் அன்றிலிருந்து இன்று வரை இந்தியாவில் தான் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.