This article is from Feb 15, 2018

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியில் மொழி சர்ச்சை..!

பரவிய செய்தி

இந்தியாவின் 69-வது குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியில் இந்தி மட்டும் இடம்பெற்றுள்ளது என்று கூறுவது தவறு. ஊர்தியின் ஒரு புறத்தில் “ தமிழ்நாடு ” என்று எழுதப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெற்ற தமிழக அலங்கார ஊர்தி என்று பரவி வரும் படங்கள் 2014-ல் நடைபெற்ற அணிவகுப்பில் இடம்பெற்றவை. 2018 ஆம் ஆண்டு குடியரசு தின அணி வகுப்பில் தமிழகம் பங்கு பெறவில்லை.

விளக்கம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரம் சார்ந்த அமைப்புகள் மற்றும் நடனங்களுடன் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் இடம்பெறும்.

இந்த ஆண்டும் வலம் வந்த தமிழக அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி பரவிய செய்திகளுக்கு மாற்றாக ஓர் சமூக வலைதள பக்கத்தில் ஊர்தியின் இரு பக்கங்களிலும் “ தமிழ்நாடு ” என்று எழுதப்பட்டதை பார்க்கவும் என படங்களை பதிவிட்டனர்.

எனினும், இவ்வாறு சமூக வலைதளங்களில் வைரலாகிய புகைப்படங்கள் 69-வது குடியரசு தினத்தில் அணிவகுத்த அலங்கார ஊர்தியின் படமே அல்ல. இந்த ஆண்டு ஊர்வலத்தில் 14 மாநிலங்கள் மற்றும் 9 அமைச்சகங்களின் அலங்கார ஊர்திகள் மட்டுமே இடம் பெற்றன.

மேலும், இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் அலங்கார ஊர்தி கலந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களும் கலந்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி என்று பரவி வரும் படங்கள் 2014-ல் நடைபெற்ற அணிவகுப்பில் இடம்பெற்றவை.

தமிழகம் மட்டுமின்றி தெலுங்கானா மாநிலத்தின் அலங்கார ஊர்தியும் அணிவகுப்பில் பங்கேற்கவில்லை. இந்தியாவின் 29-வது மாநிலமான தெலங்கானா அரசின் சார்பில், ஆசியாவின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான மேதரம் ஜட்ரா-வை தேர்வு செய்தனர். எனினும், தெலுங்கானா அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. இதேபோல் மேற்குவங்கம் மாநிலத்தின் அலங்கார ஊர்தியும் நிராகரிக்கப்பட்டதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பெனேர்ஜி கண்டனம் தெரிவித்தார்.

அலங்கார ஊர்தியில் மாநில மொழி :

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் மாநில கலாச்சார அலங்கார ஊர்தி,

  • மாநிலத்தின் வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்.
  • கொண்டாடப்படும் பண்டிகைகள். மக்களின் கலாச்சார நிகழ்வு.
  • மக்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்.
  • சுற்றுச்சூழல், எதிர்கால பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

மேலும், அலங்கார ஊர்திக்கான வடிவமைப்புகள் மத்திய அரசு கூறுவது போன்று அமைவது முக்கியம். அணிவகுப்பில் கலந்து கொள்ளவதற்கு தங்களது வடிமைப்பை ஜூலை 31, 2017-க்குள் சமர்ப்பித்து இருக்க வேண்டும். ( மேலும் பல விவரங்களுக்கு )

இதில், முதலில் எழும் பிரச்சினை என்னவென்றால் மொழிக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை ஆகும். அலங்கார ஊர்தியில் மாநிலத்தின் பெயரானது முன்புறத்தில் இந்தியிலும், பின்புறத்தில் ஆங்கிலத்திலும், மாநில மொழியில் ஊர்தியின் இரு புறங்களிலும் இடம்பெற வேண்டும் என்று அலங்கார ஊர்தி பற்றி இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு அணிவகுப்பில் இடம்பெற்ற தமிழக அலங்கார ஊர்தியின் படங்களை 2018-ல் நடைபெற்றவை என்று தவறாக பதிவிட்டுள்ளனர். எனினும், 2017-ல் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி மூன்றாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader