கோக்க கோலா இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா ?

பரவிய செய்தி
பன்னாட்டு குளிர்பான நிறுவனமான கோக்க கோலா 44,000 கோடி நஷ்டத்தில் உள்ளதால், இந்தியாவில் மேற்கொண்டு முதலீடுகள் செய்வதை நிறுத்தி விட்டு, இந்தியாவை விட்டே வெளியேறும் எண்ணத்தில் அந்நிறுவனம் உள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
ஹிந்துஸ்தான் கோக்க கோலா குளிர்பானம் நிறுவனம், தங்களது நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் விற்பனையை அதிகரித்து 2020-ம் ஆண்டிற்குள் FMCG மதிப்பை 2.5 மில்லியன் USD அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏதுவாக புதிதாக ஒரு மில்லியன் விற்பனை மையங்களை திறக்க முடிவெடுத்துள்ளனர்.
விளக்கம்
ஹிந்துஸ்தான் கோக்க கோலா குளிர்பானம் நிறுவனம்(HCCB) , இந்தியாவில் அதிவேகமாக விற்பனை செய்யப்படும் நுகர்வுப் பொருட்களை (FMCG) தயாரித்தும், விற்பனை செய்தும் வருகின்றது. மேலும், இந்நிறுவனம் இந்தியாவில் கோக்க கோலா குளிர்பானத்தை தயாரிப்பது, தொகுப்பது, விற்பனை மற்றும் விநியோகம் செய்யும் பொறுப்பில் உள்ளது.
இந்நிலையில், ஹிந்துஸ்தான் கோக்க கோலா குளிர்பானம் நிறுவனம், 2020-ம் ஆண்டிற்குள் FMCG மதிப்பை 2.5 மில்லியன் USD அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் குளிர்பானத்தின் தயாரிப்பு மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றில் மாற்றங்களை கொண்டுவர உள்ளனர்.
பழரசங்களான மாஸா, மினுட் மெய்டு மற்றும் பால் பொருட்கள் சார்ந்தவற்றில் நிறுவனத்தின் விநியோகம் மற்றும் விற்பனை மதிப்பானது முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்தியாவில் உள்ள 25 மாநிலங்களில் சுமார் 2 மில்லியன் விற்பனை மையங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றனர். எனினும், இந்தியாவில் புதிதாக ஒரு மில்லியன் விற்பனை மையங்களை திறக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து ஹிந்துஸ்தான் கோக்க கோலா குளிர்பானம் நிறுவனத்தின் CEO கிறிஸ்டினா ருக்கிஏரோ கூறுகையில், என் பொறுப்பு காலத்தில், நான் தொழிலாளர்களின் கருத்துகளை கேட்டு அறிந்து வருகின்றேன். என்னுடைய ஆராய்ச்சி, சந்தை நிலவர தகவல் போன்றவற்றை வைத்து பார்த்தால், தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியில் உள்ள கட்டமைப்பு சரியான வழியில் அமையவில்லை. எனினும், அதில் மாற்றங்களை கொண்டு வரும் நிலை ஏற்பட்டால், இந்தியாவில் ஹெச்.சி.சி.பி மூலம் இலக்கை எட்டி, வளர்ச்சி அடைய இயலும் என்று கூறியுள்ளார்.
நாம் கோக்க கோலா நிறுவனத்தின் பானங்களை குடிப்பதைத் தவிர்த்து வந்தாலும், அவர்கள் இந்தியாவில் தண்ணீரை எடுத்து குளிர்பானங்களை தயாரித்து உலக நாடுகளில் விற்பனை செய்து வர்த்தகத்தை அதிகரித்து வருகிறது. கோலா நிறுவனம் நஷ்டத்தில் இருப்பதாக நினைக்கும் நேரத்தில், அவர்கள் ஏற்றுமதி மூலம் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். மேலும், கோக்க கோலா நிறுவனம் தற்போது பழ சந்தையில் (விவசாயம்) இறங்கியுள்ளது. அதற்கென பல்லாயிரம் கோடி முதலீடுகள் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.