கோயில் சிலைகள் இஸ்லாமியர்களால் உடைக்கப்பட்டதா ?

பரவிய செய்தி
கிராமத்தில் உள்ள கருப்பன் சாமி கோயிலின் சிலைகள் இஸ்லாமியர்களால் உடைக்கப்பட்டுள்ளது. நாளை உங்களது குலதெய்வக் கோயில்களுக்கும் இந்நிலை ஏற்பட கூடாது என்றால் இச்செய்தியை அதிகம் பகிரவும்.
மதிப்பீடு
சுருக்கம்
செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள குலதெய்வக் கோயிலின் சிலைகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, சுதாகர் என்ற 16 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து மனநல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
விளக்கம்
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஊராட்சிக்கு அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தில் சுடலைமாடன் சாமி கோயில் உள்ளது. அடையாளம் தெரியாத நபர் நள்ளிரவில் கோயிலின் பூட்டை உடைத்து உள்ள புகுந்து சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிலைகள் உடைக்கப்பட்டது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அம்பாசமுத்திர காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்து வந்தனர். மேலும், அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தினர். இதைத் தொடர்ந்து கிராம மக்களும் குற்றவாளியை கைது செய்யுமாறு காவல்துறையினரிடம் வலியுறுத்தினர். இந்நிலையில், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மற்றும் சில பாஜக நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காவல்துறையினரிடம் ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியது.
சுடலைமாடன் கோயிலின் சிலைகள் சேதப்படுத்தியது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்ற 16 வயது சிறுவன் இச்செயலைச் செய்ததாக தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக சுதாகர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு செல்லாமல் ஊரைச் சுற்றித் திரிந்து வந்துள்ளான். மேலும், அச்சிறுவனே பொதுமக்கள் முன்னிலையில் சிலையை உடைத்தது ஒப்புக்கொண்டதால் பரபரப்பு முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவன் சுதாகரை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்துள்ளனர்.
மனநலம் பாதிக்கபட்ட சிறுவன் கோயில் சிலைகளை உடைத்த சம்பவத்தை, இஸ்லாமியர்கள் உடைத்ததாகக் கூறி மதச்சாயம் பூசி, தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.