கௌரி லங்கேஷை சுட்டுக் கொன்ற அக்பர் அலி கைதா ?

பரவிய செய்தி
கர்நாடகாவைச் சேர்ந்த மூத்தப் பெண் பத்திரிகையாளரான கௌரி லங்கேஷை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவரான அக்பர் அலி என்பவரை கர்நாடக காவல்துறை கைது செய்தனர். இப்படுகொலையானது, இந்து மதவாதிகளால் நிகழ்த்தப்பட்டது என்று கூறிய நிலையில் இஸ்லாமியர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
கௌரி லங்கேஷை படுகொலைப் பற்றியும், அவரைத் தொடர்ந்து படுகொலைச் செய்யப்பட வேண்டியவர்கள் என்று பல பத்திரிகையாளர் பெயர்கள் உள்ள பட்டியலை சமூக வலைதளத்தில் வெளியிட்டவரை டெல்லி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விளக்கம்
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்தப் பெண் பத்திரிகையாளரான கௌரி லங்கேஷ் சில மாதங்களுக்கு முன்பு நள்ளிரவில் அவரது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டப் படுகொலைச் செய்யப்பட்டார். அவர் இறந்து சில மாதங்கள் ஆகியும் குற்றவாளிகள் யார் என்று, இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் அக்பர் அலி என்பவரை கர்நாடக காவல்துறை கைது செய்ததாகச் சமுக வலைதளங்களில் தவறானச் செய்திகள் பதிவிடப்படுகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில், “ கௌரி லங்கேஷின் உடலை கொலையாளிகள் துப்பாக்கி குண்டுகளால் வீடு முழுவதும் சிதறச் செய்தது எந்தவித வருத்தத்தையும் ஏற்படுத்தவில்லை. அவளது மற்றும் அவளது உரிமைகளை சேதப்படுத்தியது நாட்டை பிளவுப்படுத்த தூண்டும் பத்திரிகையாளர்களின் நிலையை உணர்த்தும் “.
இதைத் தொடர்ந்து மற்றொரு பதிவில், சில நாட்களுக்கு முன்பு இறந்த கௌரி லங்கேஷின் படுகொலை, பத்திரிகையாளர் மற்றும் ஆர்வலர்கள் என்ற பெயரில் திரியும் தேசத் துரோகிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது, இது இறுதியானது அல்ல. தொடர் படுகொலைக்கு உள்ளாக்கப்பட வேண்டிய தேசவிரோதிகள், “ ஷோபா டே, அருந்ததி ராய், சகரிகா கோஸ், காவ்யா கிருஷ்ணன், ஷேஹ்லா ராஷித், பல தேச விரோதிகள் மற்றும் நேர்மையற்ற அரசியல்வாதிகள். இந்த தாக்குதல் பட்டியலில் உள்ளவர்கள் பற்றி அறிந்து அழிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளான்.
கோஸ் என்பவர் இந்த பதிவுகளை படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் டெல்லி காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இதையடுத்து சில நாட்களில் அந்த பதிவானது நீக்கப்பட்டது. இவ்வாறு பத்திரிகையாளர்களின் பெயர்களை பரிந்துரை செய்தவர் பற்றி ஆராய்ந்த டெல்லி தகவல் தொழில்நுட்பப் பிரிவினர், அப்பதிவு “ விக்ரம் ஆதித்யா ராணா ” என்ற பெயருடைய முகநூல் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். அந்நபரின் கணினியின் IP முகவரியும் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்நபரின் கைதுக்கு பின்னரே அவரின் முழுவிவரம் தெரிவிக்கப்படும் என்று டெல்லி காவல்துறை கூறியுள்ளது.