சசிகலா வீட்டில் பல ஆயிரம் கோடி பறிமுதல் செய்யப்பட்டதா?

பரவிய செய்தி
TTV தினகரன் மற்றும் சசிகலா அவர்களது வீடுகளில் நடத்த வருமான வரிச் சோதனையில், வீட்டில் சுரங்கம் அமைத்து பதுக்கி வைத்திருந்த பல கோடி ரூபாயை வருமான வரித் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மதிப்பீடு
சுருக்கம்
சசிகலா மற்றும் தினகரன் வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகக் கூறியப் பல கோடி ரூபாய் பணங்களின் புகைப்படங்கள் டெல்லியில் நடந்த வருமான வரிச் சோதனையின் போதும், மும்பை வங்கி கொள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் இணைப்பு ஆகும்.
விளக்கம்
சில நாட்களுக்கு முன்பு TTV தினகரன் உள்ளிட்ட சசிகலாவின் அனைத்து உறவினர்களுக்கு சொந்தமான பல இடங்களிலும் வருமான வரியினர் சோதனை நடத்தினர். 1800க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகளால் ஐந்து நாட்களாக நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையானது இதுவரை யாரும் காணாத மிகப்பெரிய சோதனையாகக் கருதப்பட்டது.
இச்சோதனையில், TTV தினகரனுக்கு சொந்தமான வீட்டில் சுரங்கம் அமைத்து பல கோடி ரூபாயை பதுக்கி வைத்திருந்ததை வருமான வரித் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. எனினும், இச்செய்திகள் குறித்து, TTV தினகரன் ஊடகத்தில் மறுப்பு தெரிவித்தார். மேலும், இச்செய்திகள் தொடர்பாக பரவியப் படங்கள் அனைத்தும் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட படங்கள் என்பதே உண்மை.
ஆம், பரவிய செய்தியில் காண்பிக்கப்பட்ட கட்டுக்கட்டாகப் புதிய ரூபாய் நோட்டுகள் டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்டவை. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியின் “ இந்திய பங்குச் சந்தை ” (NSE) தரகரான சஞ்சய் குப்தாவின் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நடத்திய சோதனையில் 11 கோடி ரூபாய் பணத்தையும், லேப்டாப் போன்றவற்றை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர்.
அடுத்து காண்பிக்கபட்ட படத்தில் உள்ள சுரங்கமானது, மும்பை “ பேங்க் ஆப் பரோடா ” வங்கியில் நடந்த கொள்ளையின் விசாரணையின் போது எடுக்கப்பட்டது ஆகும். வங்கியில் பணம் வைத்திருக்கும் லாக்கர் அறைக்கு சுரங்கம் அமைத்து 30 லாக்கரில் உள்ள அனைத்தையும் திருடியுள்ளனர். வங்கியின் விடுமுறை நாட்களில் கொள்ளையானது நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக, இதே முறையில் கொள்ளையடித்த இருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
எனவே, இருவேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளின் படங்களை ஒன்றிணைத்து தமிழ்நாட்டில் சசிகலா அவர்களின் வீட்டில் நடந்ததாகக் கூறி வதந்தியைப் பரப்பியுள்ளனர்.