சாரணர் இயக்கத் தலைவர் இந்து மகாசபையைச் சேர்ந்தவரா ?

பரவிய செய்தி
தமிழக சாரணர் இயக்கத் தலைவர் தேர்தலில் ஹெச்.ராஜா தோல்வி, வெற்றிப் பெற்ற பி.மணி அவர்கள் அகில பாரத இந்து மகாசபையின் முன்னாள் விஸ்தாரக் ஆவார்.
மதிப்பீடு
சுருக்கம்
தமிழக சாரணர் இயக்கப் புதிய தலைவர் திரு. மணி அவர்களை தொடர்புக் கொண்டு பேசியப் போது முற்றிலும் தவறான தகவல்கள் என்று கடுமையாக மறுத்துள்ளார்.
விளக்கம்
தமிழக சாரணர் இயக்கத்தின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தலானது 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது இவ்வருடம் நிகழ்ந்தது.
சாரணர் இயக்கத் தேர்தல் பற்றி பலரும் அறியாத நிலையில், இவ்வருடம் தமிழகத்தில் அனைவருக்கும் இத்தேர்தல் பற்றி அரிய வைத்தவர் பாஜக தேசிய செயலாளர் திரு ஹெச்.ராஜா அவர்கள். ஒரு சாரணர் இயக்கத் தேர்தலில் அரசியல் கட்சியை சேர்ந்தவர் போட்டியிட்டது இதுவே முதல் முறையாகும். செப்டம்பர் 16 ம் தேதி நடைபெற்ற தமிழக சாரணர் இயக்கத் தேர்தலில் தலைவர் பதவிக்காக முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குநர் பி.மணி மற்றும் பாஜக தேசிய செயலாளர் திரு ஹெச்.ராஜா ஆகியோர் போட்டியிட்டனர்.
சென்னையில் உள்ள பாரத சாரணர், சாரணியர் இயக்கத் தலைமையகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில், அனைத்து மாவட்டங்களில் உள்ள 504 வாக்காளர்களில் 286 பேர் வாக்களித்தனர். பதிவான 286 வாக்குகளில் பி.மணி அவர்கள் 232 வாக்குகளும், ஹெச்.ராஜா அவர்கள் 52 வாக்குகளும் பெற்றனர். இதைத் தொடர்ந்து முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குநர் பி.மணி அவர்கள் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
பாஜக தேசிய செயலாளர் திரு ஹெச்.ராஜா அவர்கள் சாரணர் இயக்கத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து இத்தேர்தல் செல்லாது என்று கூறினார். இப்படி இருக்கையில், சமூக வலைதளங்களில் பலர் சாரணர் இயக்கத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்திருந்தாலும், பெற்றிப் பெற்ற பி.மணி அவர்கள் அகில பாரத இந்து மகாசபையின் முன்னால் விஸ்தாரக் என்றுக் கூறி செய்திகள் பரவின. எப்படி பார்த்தாலும் வெற்றிப் பெற்றது ஆர்.எஸ்.எஸ் தான் என்று கூறி வந்தனர்.
ஆனால், இது போன்ற எந்தவொரு பதவியிலும் முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குநர் பி.மணி அவர்கள் இருந்ததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை.
திரு.மணி அவர்களை தொடர்புக் கொண்டு இச்செய்தி பற்றி வினவியபோது, இவை அனைத்தும் முற்றிலும் தவறான தகவல்கள் என்று கடுமையாக மறுத்துள்ளார். எனவே, இச்செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்று தெளிவாக விளங்குகின்றன.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.