சென்னை, கோவை பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்கள்.

பரவிய செய்தி
இந்திய பெரு நகரங்களில் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துன்புறுத்தலில், சென்னை மற்றும் கோவை நகரங்கள் 0.2 மற்றும் 0.1 புள்ளிகள் என்ற மிகக்குறைந்த குற்ற எண்ணிக்கையைக் கொண்டிருக்கின்றன.
மதிப்பீடு
சுருக்கம்
தேசிய குற்றப் புலனாய்வின் ஆவணங்களின்படி, இந்தியாவின் மெட்ரோ சிட்டிகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல், தாக்குதல்கள் போன்ற பல்வேறு வகையான குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கையில் குறைவான புள்ளிகளை பெற்று சென்னை மற்றும் கோவை நகரங்கள் இறுதி இடத்தில் உள்ளன.
விளக்கம்
இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச் சம்பவங்களின் பதிவுகளை ஒப்பிட்டு பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் எதுவென்று அறிந்து கொள்ள முடிகிறது.
2016 ஆம் ஆண்டின் வரையிலான தேசிய குற்றப் புலனாய்வின் ஆவணங்களின் பதிவுகள்படி, இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களின் புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியாகின. இது மத்திய அரசின் கீழ் உள்ள துறைச் சேர்ந்த ஆவணங்கள் என்பதால் முற்றிலும் உண்மையான தகவல்கள் என்பதில் சந்தேகமில்லை.
இத்தகைய பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த நகரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் உள்ள மற்ற பெரு நகரங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் மிகக்குறைந்த அளவிலே உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் பிரிவில் தமிழகத்தின் சென்னை மற்றும் கோவை 0.2 மற்றும் கோவை 0.1 புள்ளிகள் மட்டுமே பெற்று பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக அமைந்துள்ளது. நாட்டில் பெரும்பாலான நகரங்கள் பெண்களுக்கு பாதுகாப்பில்லா நகரமாக மாறி வரும் நிலையில், தமிழக நகரங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு மிகுந்ததாக திகழ்கிறது என்று தேசிய குற்றப்பிரிவு ஆவணத்தின் பதிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும், வர்த்தக நகரமான மும்பையிலும், இன்டர்நெட் நகரமான பெங்களூரில் கூட பெண்களுக்கு பாதுகாப்பில்லை. மேலும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் அதிகளவில் நடைபெற்றதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. இப்பட்டியலில், பீகாரின் பாட்னா நகரில் பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறவில்லை என்றாலும் பெண்களின் மீதான தாக்குதல்கள் அதிகளவில் உள்ளன.
இதேபோன்று, 2015 ஆண்டு தேசிய குற்றப்பிரிவு ஆவணங்களின்படி, கோவை, சென்னை நகரங்களே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களாக திகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.