செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கு வரியா ?

பரவிய செய்தி
வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்று பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
நாய் அல்லது மற்ற விலங்குகள் கடித்து பாதிப்போ அல்லது இறப்போ நேர்ந்தால் அதற்காக இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவையே செயல்படுத்த உள்ளதாக பஞ்சாப் அமைச்சர் கூறியுள்ளார்.
விளக்கம்
வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்று பஞ்சாப் அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக சில முகநூல் பக்கங்கள், வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு ரூ250 வரி செலுத்த வேண்டும். மேலும், மாடு, குதிரை, ஒட்டகம் போன்றவற்றிக்கு ரூ500 வரி செலுத்த வேண்டும் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளதாகக் கூறிச் சில செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
இது குறித்து பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துசெய்தியாளர்களிடம் கூறுகையில், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு வரி செலுத்துவது தொடர்பாக பஞ்சாப் உள்துறை அமைச்சகத்தால் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை. அவ்வாறு கூறப்படும் செய்திகள் யாவும் தவறானவை. புரளிகளை நம்ப வேண்டாம் என்றும், பொய்யான அறிக்கைகளை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.
மேலும், மாநிலத்தில் வெறி நாய் கடித்து இறந்த சிறுவனின் தந்தை தொடர்ந்த வழக்கில் பஞ்சாப் மாநில நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில், நாய் அல்லது விலங்குகள் தாக்கி ஏற்படும் இழப்புக்கு அரசு இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்துவின் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பஞ்சாப் மாநகர சபை மற்றும் மாநகராட்சி விதியின் படி விலங்குகளால் ஏற்படும் தாக்குதல் தொடர்பான இழப்பீட்டிற்கான சட்ட விரைவை அறிவித்ததாகவும், அதில் புதிய வரிகள் ஏதும் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதைத் தவறாகப் புரிந்துக் கொண்டு சில முகநூல் பக்கங்களும், வலைதளங்களும் பஞ்சாப்பில் செல்லப் பிராணிகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்று அறிவித்ததாக வதந்தியைப் பரப்பியுள்ளனர்.