சோமனூர் விபத்தை விசாரிக்க விசாரணைக் குழு அமைப்பு.

பரவிய செய்தி
சோமனூர் பேருந்து நிலையக் கட்டிடம் இடிந்த விழுந்த விபத்தை விசாரிக்க மாநில அரசு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் தலைமையின் கீழ் விசாரணைக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.
விளக்கம்
சோமனூரில் உள்ள பேருந்து நிலையக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே உள்ள சோமனூர் என்ற ஊரின் பேருந்து நிலையக் கட்டிடத்தின் மேற்கூரை செப்டம்பர் 7 ம் தேதி இடிந்து விழுந்தது. அதில், பேருந்து நிலையத்தில் இருந்த 20 வயது கல்லூரி மாணவி உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர், 12 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பே சோமனூர் பேருந்து நிலையக் கட்டிடம் மோசமான நிலையில் உள்ளது என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாகவும், ஆனால் அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது என்ற குற்றம்சாற்றியுள்ளனர். சோமனூர் பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று சிலர் கூறினர்.
இத்தனை பெயரை பலிகொண்ட சோமனூர் பேருந்து நிலையக் கட்டிடம் இடிந்த சம்பவம் மக்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தகுந்த விசாரணையை நடத்த வேண்டும் என்று பலர் கூறினர். இதை தொடர்ந்து சோமனூர் பேருந்து நிலையக் கட்டிடம் இடிந்த விபத்தை விசாரிக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப் சிங்க் பேடி தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. காவல்துறையிடம் இருந்து விபத்து குறித்த ஆவணங்களையும், கட்டிடம் பற்றிய ஆவணங்களையும் ககன்தீப் சிங்க் பெற்றுள்ளார். மேலும் சம்பவம் நடந்த சோமனூர் பேருந்து நிலையத்தை நேரில் சென்று பார்க்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். விபத்து குறித்த விசாரணையின் அறிக்கை விரைவாக தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சோமனூர் பேருந்து நிலையக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் கருத்து.