ஜனவரி 14-ஐ பொங்கல் தினமாக அறிவித்தது அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா அரசு.

பரவிய செய்தி
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாண அரசு ஜனவரி 14-ம் தேதியை பொங்கல் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மதிப்பீடு
சுருக்கம்
பொங்கல் தினம் குறித்து விர்ஜீனியா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்து வருகிற 2018-ம் ஆண்டிலிருந்து ஜனவரி 14 பொங்கல் விழாவாக் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளனர்.
விளக்கம்
அறுவடைத் திருவிழாவான ஜனவரி 14 உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் பொங்கல் தினமாகக் கொண்டாடி வருகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் பொங்கல் விழாவிற்கு அங்கீகாரம் வழங்கப்படுகின்றன என்பதை நாம் அறிவோம்.
இந்நிலையில், 40,000க்கும் அதிகமான தமிழ் மக்கள் வசிக்கும் அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் அறுவடைத் திருவிழாவான பொங்கல் விழாவை கொண்டாடுவதற்கான அங்கீகாரத்தை அமெரிக்க அரசாங்கம் வழங்கியுள்ளது.
பொங்கல் தினம் குறித்து விர்ஜீனியா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்திற்கு அமெரிக்க சட்டசபை பிரதிநிதி டேவிட் புலோவா கடந்தாண்டு பிப்ரவரி 14-ல் ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் 2018-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதியிலிருந்து ஒவ்வொரு வருடமும் விர்ஜீனியா மாகாணத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படுமென கூறப்பட்டுள்ளது.
பொங்கல் விழாவிற்கு இத்தகைய அங்கீகாரம் கிடைத்தது விர்ஜீனியாவில் வாழும் தமிழ் மக்களுடையே எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் விழாவிற்கு அரசு விடுமுறை அளிக்கவில்லை என்றாலும், பொங்கல் பண்டிகை கொண்டாட விரும்பும் குழந்தைகள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
தீர்மானம் குறித்து உரையாற்றிய டேவிட் புலோவா, ” 75 மில்லியனுக்கும் அதிகமான தமிழ் மக்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். ஜனவரி 14-ஐ பொங்கல் தினமாக அறிவித்ததன் மூலம், விர்ஜீனியாவில் வசிக்கும் தமிழ் மக்களின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பிற மக்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக அமையும் என்று கூறியுள்ளார்”.
இதற்கு முன்பாக கனடாவில் ஜனவரி மாதம் தமிழர்கள் மாதமாக அறிவிக்கப்பட்டு பொங்கல் பண்டிகை விமர்சியாக கொண்டாடப்பட்டது. அமெரிக்காவின் ஜியோர்ஜியா மாகாணத்தில் க்வின்நெட் கவுன்டி 2017 டிசம்பரை தமிழ் மொழி மாதமாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் அங்குள்ள தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையைக் கலாச்சார திருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.