“ ஜெய் ஸ்ரீ ராம் ” என்று கூறி உரையைத் தொடங்கியது அமீரகத்தின் இளவரசரா ?

பரவிய செய்தி
“ ஜெய் ஸ்ரீ ராம் ” என்று தன் உரையை ஆரம்பித்தார் ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர்.
மதிப்பீடு
சுருக்கம்
2016-ல் நடைபெற்ற இந்து பிராத்தனை நிகழ்ச்சியில், அரபு நாட்டின் முக்கிய அரசியல் சார்ந்து உரையாற்றுபவரான சுல்தான் அல் கஸ்ஸாமி உரையாற்றியதை அரபு இளவரசர் என்ற தவறான தகவல்களாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
விளக்கம்
பிரதமர் மோடி அபுதாபியில் கட்டப்பட உள்ள இந்து கோவிலுக்கு பிப்ரவரி 11-ம் தேதி அடிக்கல் நாட்டினார். அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்துக் கோவில் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்நிகழ்ச்சி கருதப்பட்டது.
இந்நிலையில், அமீரகத்தின் பட்டத்து இளவரசர் நிகழ்ச்சி ஒன்றில் “ ஜெய் ஸ்ரீ ராம் ” என்றுக் கூறி தன் உரையைத் தொடங்கியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதே போன்று இந்தியாவின் பிரபல பத்திரிகையான டைம்ஸ் நொவ் தனது ட்வீட்டர் பக்கத்தில், “ அமீரகத்தின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சயித் அல் நய்ஹான் அபுதாபியில் மொராரி பாபு தலைமையில் நடைபெற்ற ராம் கதா என்ற நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் “ ஜெய் ஸ்ரீ ராம் ” என்றுக் கூறி தன் உரையைத் தொடங்கியதாகக் கூறி பதிவிடப்பட்டது. மேலும், அதே பக்கத்தில் 8 மணி நேரத்திற்கு பிறகு அதே பதிவு மறுப்பதிவு செய்யப்பட்டது.
அமீரகத்தின் பட்டத்து இளவரசர் “ ஜெய் ஸ்ரீ ராம் “ என்று உரையை ஆரம்பித்தார் என்று சமூக வலைத்தளத்திலும், பத்திரிகையில் கூறியதும் உண்மையல்லவே. வைரலாகிய வீடியோவில் இருப்பவர் அரபு நாட்டின் இளவரசர் அல்ல, சுல்தான் அல் காஸ்ஸாமி என்பவர் ஆவார். இந்த வீடியோ காட்சியானது பிரதமர் மோடி அமீரகம் செல்வதற்கு முன்பாகவே எடுக்கப்பட்டது.
2016-ம் ஆண்டு செப்டம்பரில் அபுதாபியில் மொராரி பாபு தலைமையில் நடைபெற்ற ராம் கதா என்ற இந்து பிராத்தனை நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் உரையாற்றிய அரபு நாட்டைச் சேர்ந்த கட்டுரையாளர் மற்றும் அரபு நாட்டின் விவகாரங்கள் குறித்து உரையாற்றுபவரான சுல்தான் அல் கஸ்ஸாமி “ ஜெய் ஸ்ரீ ராம் ” என்று கூறியிருப்பார். அந்த வீடியோவை காண ..
2014-ல் சுல்தான் அல் கஸ்ஸாமி MIT LAB MEDIA நிர்வாகத்தின் அங்கத்தினராக இருந்த போது, உலகளவில் அரபைச் சேர்ந்த சிறந்த 100 சிந்தனையாளர்களின் பட்டியலில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தவறான செய்திகள் பரவுவது ஒன்றும் புதிதல்ல, எனினும் பிரலமான பத்திரிகையிலேயே, வேறு ஒரு நிகழ்ச்சியுடன் தவறான செய்தியை பதிவிடுவதால் உண்மை என்று நினைத்து மக்களும் அதிகம் பகிரத் தொடங்கியுள்ளனர்.