டெல்லியில் காற்று மாசுபாடுதல் உச்ச வரம்பை எட்டியது.

பரவிய செய்தி
தலைநகர் டெல்லியில் காற்று மாசானது உலக சுகாதார அமைப்பின் அளவை பல முறை கடந்து அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது. மக்கள் வெளியே அதிகம் செல்ல வேண்டாம் என்று அரசு தெரிவித்து வருகிறது.
மதிப்பீடு
சுருக்கம்
கடந்த தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் டெல்லி அரசு தடை விதித்தது. இருப்பினும், டெல்லியில் தீபாவளிக்கு பிறகு காற்று மாசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
விளக்கம்
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சில தினங்களாக காற்று மாசுப்பாடு அதிகமாகக் காணப்படுகிறது. காற்றில் உள்ள மாசு நுண்துகள்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட பன்மடங்கு அதிகரித்துள்ளதாலும், பனிப்பொலிவு அதிகம் என்பதாலும் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் சுகாதார அவசரம் கருதி யாரும் அதிகம் வெளியே செல்ல வேண்டாம் என்று இந்திய மருத்துவ கழகம் எச்சரித்துள்ளது. இருமல் தொடர்பான உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள் சுவாசிப்பதற்கு கூட சிரமப்படுவதாக மருத்துவர்களின் அறிக்கை தெரிவிக்கின்றன. ஆகையால், ஆரம்பப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. மேலும், பள்ளியில் உள்ள குழந்தைகைகளை வெளிபுறம் விளையாட அனுமதிக்க வேண்டாம் எனவும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மாசில் இருந்து தடுக்கும் முகமூடிகளை அனுவித்து அனுப்புமாறு கூறியுள்ளனர்.
காற்றில் உள்ள துகள்கள் அளவானது 2.5 PM என்ற நிலையில் இருந்தால் அவை எளிதாக மனிதர்களின் இரத்த ஓட்டத்தில் கலந்து விடும். காற்றில் உள்ள நுண்துகள் 60 என்ற அளவில் இருந்தால் பாதுகாப்பான நிலை என்று உலக சுகாதார அமைப்பானது கூறியுள்ளது. டெல்லியில் காற்றில் உள்ள மாசின் தரக் குறியீடு கன மிட்டர் ஒன்றுக்கு 742 மைக்ரோகிராம்களில் உள்ளன. இருப்பினும், நகரின் சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடானது 999 என்ற உச்சவரம்பை எட்டியதாக கூறியுள்ளனர்.
இது குறித்து டெல்லி முதல்வர் கூறுகையில், தற்போது டெல்லி நகரமே ஒரு “ எரிவாயு அறை ” போன்று மாறியுள்ளது. கடந்த வருடத்தின் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடித்ததால் உண்டான மாசில் தொடங்கி பக்கத்து மாநிலங்களில் விவசாய பயிர்கள் எரிப்பது வரையிலான செயல்களால் நகரானது மாசுபட்டு உள்ளது.
எனவே, கடந்த ஆண்டில் பின்பற்றிய ஒற்றை மற்றும் இரட்டை இலக்க வாகனங்களை மாற்றி மாற்றி இயக்கும் திட்டத்தை நவம்பர் 13 முதல் 17-ம் தேதி வரை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் அதிகளவில் காற்று மாசுபாடு ஏற்பட்டதால் கடந்த தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் டெல்லி அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.