டெல்லியில் 40 வகையான அரசு சேவைகள் இனி வீடு தேடி வரும்.

பரவிய செய்தி
டெல்லிவாசிகளுக்கு பெரிதும் பயன்படும் வகையில், அரசுச் சான்றிதழ்கள் பெறுவது உள்ளிட்ட 40 வகையான சேவைகள் வீடு தேடி வரும் திட்டத்தை டெல்லி அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
நாட்டிலேயே முதல் முறையாக இந்த வித்தியாசமான திட்டத்தை டெல்லி மாநிலத்தின் ஆம் ஆத்மி அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் அரசு அலுவலங்களில் உள்ள அதிகாரிகளுக்கு மக்கள் லஞ்சம் கொடுக்கும் நிலை மாறும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
விளக்கம்
அரசுச் சான்றிதழ்கள் பெறுவதற்காக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். அவ்வாறு செல்லும் அரசு அலுவலங்களில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டியநிலை ஏற்படுவதாக தினந்தோறும் புகார்கள் வந்த வண்ணமே உள்ளன.
இந்நிலையை சரி செய்யும் நோக்கத்தில் டெல்லியின் அரவிந்த் கேஜ்ரிவால் அரசு 2018-ல் ஓர் புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளது. “மொபைல் நண்பர் “ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து வகையான சான்றிதழ்கள் மற்றும் குடிநீர், வீடு வரி, மின்சாரக் கட்டணம் என 40 வகையான சேவைகள் வீடு தேடி வரும். டெல்லி மக்களின் வீட்டிற்கே வரும் அரசு அலுவலர் சான்றிதழ்களுக்கு தேவையான அசல் ஆதாரங்களை டிஜிட்டல் முறையில் படம் எடுத்துக் கொள்வார். இதற்கென பிரத்யேகமாக நகல்கள் அளிக்கத் தேவையில்லை.
மேலும், “ மொபைல் நண்பர் “ சேவை மையத்திற்கு மக்கள் நேரடியாக தொலைபேசி வாயிலாக தேவைகளை தெரிவிக்கலாம். வீட்டிற்கு வரும் அரசு அலுவலரே தேவையான லேப்டாப், கேமரா உள்ளிட்ட அணைத்தும் எடுத்து வருவார். இத்திட்டம் குறித்த முடிவானது நவம்பர் 16-ம் டெல்லி அமைச்சரவையில் எடுக்கப்பட்டது.
இச்சேவையானது விடுமுறை நாட்களில் கூட கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்படும். இதனால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, லஞ்சமும் ஒழிக்கப்படும். “ மொபைல் நண்பர் “ திட்டம் நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரனமாக அமையும் என்று டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.
இச்சேவைகளை பெறுவதற்கென சிறிய தொகை சேவைக் கட்டணமாக பெறப்படும். அது அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் இருக்கும். மேலும், இந்த சேவையால் மக்களுக்கு கிடைக்கும் பலனைப் பொறுத்து கூடுதலாக 30 சேவையை இணைக்க உள்ளனர். குறிப்பாக, ரேஷன் பொருட்களையும் வீடுகளுக்கே சென்று வழங்குவது பற்றியும் விவாதித்து வருகின்றனர்.