ட்ரம்ப் சவூதி செல்வதை 17 ஆண்டுகளுக்கு முன்பே கணித்துள்ளனரா ?

பரவிய செய்தி
17 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான “Simpson” கார்ட்டூன் தொடரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பற்றி இடம்பெற்ற காட்சிகள். ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் சவூதி செல்வது வரை அன்றே கணித்துள்ளனர்.
மதிப்பீடு
சுருக்கம்
ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராகிய பின்னர் மே 21, 2017-ல் சவுதி அரேபியா சென்றதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கார்ட்டூன் வீடியோவானது மே 26, 2017-ல் youtube-ல் வெளியாகியது. அதில் இடம்பெற்ற படங்களை 17 ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்டது என்று வதந்தியை பரப்பியுள்ளனர்.
விளக்கம்
உலகில் நடந்து கொண்டிருக்கும் பல நிகழ்வுகள் முன்கூட்டியே சிலரால் கணிக்கப்படுகிறது என்றும், அதை சிலரே தீர்மானிக்கின்றனர் என்றும் கூறி சில செய்திகள் நம்மை சுற்றி வலம் வருகின்றன.
அவ்வாறு முன்கூட்டியே சொல்லப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று தான் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அரேபியா சென்றது, அது பற்றிய பல நிகழ்வுகள் 17 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான “Simpson” என்ற கார்ட்டூன் தொடரில் தெளிவாக இடம்பெற்றதாகவும் கூறிய செய்திகள் இணையத்தில் அதிகளவில் வைரலாகி வருகின்றன. இவை அனைத்தும் ரகசியக் குழுக்களால் தீர்மானிக்கப்பட்டது என்று பலரும் நம்பி வருகின்றனர்.
“Simpson” என்ற கார்ட்டூன் தொடரானது பல ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்ட மிக நீண்ட கார்ட்டூன் தொடர் ஆகும். இத்தொடரானது வருங்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளை முன்கூட்டியே சொல்வது இல்லை, முன்பு நடந்த நிகழ்வுகளை கேளிக்கையாக கார்ட்டூன் வடிவில் தொடராக வருபவை. தெளிவாக கூற வேண்டும் என்றால், 17 ஆண்டுகளுக்கு முன்பு “Simpson” கார்ட்டூன் தொடரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அரபி மன்னர் என்று மூன்று பேர் ஒரு உருண்டையை சுற்றி நின்று தொடும் படத்தை போன்று 2017-ல் நிகழ்ந்ததாகக் கூறுவது முற்றிலும் தவறு.
இப்படங்கள் மே 21, 2017-ல் சவூதியில் நடைபெற்ற குளோபல் சென்டர் ஃபார் காம்படிங் எக்ஸ்ட்ரிமிஸ்ட் ஐடியோலாஜியின் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட அமரிக்க அதிபர் ட்ரம்ப், சவூதி மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ், எகிப்து அதிபர் அப்டெல் பாடாஹ் அல்-ஸிஸி ஆகியோர் எடுத்துக் கொண்டது. இதை கார்ட்டூன் படங்களாக மாற்றி மே 26, 2017-ல் youtube-ல் வெளியாகிய தொடரில் பயன்படுத்தியுள்ளனர். இப்படங்கள் சுவற்றில் இடம்பெறும் காட்சியை வீடியோவின் தொடக்கத்தில் 6 வது நொடியில் பார்க்கலாம்.
இத்தகைய கார்ட்டூன் படங்கள் இங்கு எவ்வாறு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதேபோல் அமெரிக்காவிலும் சர்ச்சையை உண்டாக்கின.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.