தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் பாத பூஜையா ?

பரவிய செய்தி
சென்னை குருநானக் பள்ளி மாணவர்களுக்கு பாத பூஜை செய்த அரசு பள்ளி மாணவர்கள். “ கன்யா வந்தனம் ” என்கிற பெயரில் நடந்த தரக்குறைவான செயல்.
மதிப்பீடு
சுருக்கம்
“ கன்யா வந்தனம் ” என்கிற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள் பங்கு பெற்றனர். இதில் பெண் குழந்தைகளுக்கு ஆண் மாணவர்களே பாத பூஜை செய்தனர்.
விளக்கம்
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் 9-வது இந்து ஆன்மீக சேவை கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் 24-ம் தேதி நடத்தப்பட்ட “ கன்யா வந்தனம் ” என்ற நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரசு பள்ளி மாணவர்களை கொண்டு பாத பூஜை நடந்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“ கன்யா வந்தனம் ” நிகழ்ச்சியில் பெண்மையைப் போற்றுகிறோம் என்கிற வகையில் 3,300 பெண் குழந்தைகளுக்கு பாத பூஜை நடத்தப்பட்டது. இதில், 10 வயதுக்குட்பட்ட மாநகராட்சி மற்றும் அரசு பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், ஆண் குழந்தைகள் அதே வயதுடைய பெண் குழந்தைகளின் பாதங்களை கழுவி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து மலர்தூவி பாதப் பூஜை செய்தனர். இவர்களுடன் முதியோர் இல்லத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட 40 பெண்களுக்கும் பாத பூஜை செய்தனர்.
இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகளை எவ்வாறு இது போன்ற நிகழ்ச்சிகளில் பயன்படுத்தலாம் என்று இச்சம்பவம் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியது.
மதம், கலாச்சாரம், பண்பாடு என்றுக் கூறி மாணவர்களையும், குழந்தைகளையும் இவ்வாறு பயன்படுத்துவதை ஏற்க இயலாது. இந்த வயதில் குழந்தைகளுக்கு இத்தகைய கலாச்சார நிகழ்வுகள் குறித்த புரிதல் இருக்க வாய்ப்பில்லை. இன்று இந்து மத நிகழ்வுக்கு அரசு பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்றது போல், நாளை வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் மத நிகழ்வுகளுக்கு அரசு பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்றால் ஏற்றுக் கொள்வீர்களா..? என்று குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் youturn தொடர்பு கொண்ட போது கேள்வி எழுப்பினார் . ( விகடனில் இவரே இது தொடர்பாக பேட்டி அளித்தவர் ). மேலும் அரசுப் பள்ளி குழந்தைகள் , தனியார் பள்ளிக் குழந்தைகளுக்கு பாத
பூஜை என்பதெல்லாம் இல்லை என்று தெரிவித்தார் .
இந்து ஆன்மீக சேவை கண்காட்சியில் சாதிக்கு ஒரு அரங்கு அமைத்துள்ளனர். புத்தகக் கண்காட்சியில் பெரியார், அம்பேத்கர் புத்தகங்கள் அதிகம் விற்ற நிலையில், சாதிய உணர்வை ஊக்குவிற்காதா.? ஆன்மீகப் பணியா அல்லது சாதி வளர்ப்பா என்ற கேள்வியையும் சமூக ஆர்வலர்கள் எழுப்புகிறார்கள்.
மேலும், அறிவுத் திறனை மேம்படுத்த பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதம் சார்ந்த நிகழ்வுகளால் ஏதேனும் பயனுள்ளதா.? இவை கண்டிக்கத்தக்க செயல் என்று இந்நிகழ்ச்சிக்கு எதிராக பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இச்சர்ச்சை ஒருபுறம் இருக்க, தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் பாத பூஜை செய்தனர் என்றுக் கூறி சிலர் வதந்தியை பரப்பியுள்ளனர்.