தமிழகத்தில் 55 சதவீதம் பெண்கள் இரத்தசோகையால் பாதிப்பு.

பரவிய செய்தி
தமிழகத்தில் 55 சதவீதம் பெண்கள் இரத்தசோகைக் குறைபாட்டுடன் உள்ளனர். மேலும் 14 சதவீதம் பெண்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் உள்ளனர் என்று மத்திய அரசின் ஆய்வு கூறுகிறது.
மதிப்பீடு
சுருக்கம்
இந்திய அளவில் சுமார் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட மாதிரிக் கணக்கெடுப்பில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
விளக்கம்
எந்திரங்கள் கூட தோற்றுப் போகும் எம் நாட்டுப் பெண்களின் சுறுசுறுப்பிற்கு என்று பெருமை கொள்ளும் அளவிற்கு போற்றப்பட வேண்டிய பெண்களே அதிகளவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசின் ஆய்வு கூறுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரம் ஊட்டச்சத்து வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் நோக்கமே குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் வழிகாட்டுதல் போன்றவையே. சென்ற வருடம் மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குடும்ப சுகாதார மையத்தின் சார்பில் இந்திய அளவில் சுமார் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் மாதிரி கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. இதில் 15 வயது முதல் 49 வயது வரை உள்ள பெண்களில் 50 சதவீதம் பேர் இரத்தசோகைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த ஆய்வில், 22 சதவீத பெண்கள் சராசரியாக இருக்க வேண்டிய ஊட்டச்சத்தை விட குறைவான அளவில் ஊட்டச்சத்தை பெற்றுள்ளனர். பதினொன்று வயதுக்கு உட்பட்ட இந்திய குழந்தைகளில் 58 சதவீதம் பேர் இரத்தசோகைக் குறைபாடுடன் உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
இரத்தசோகையானது, உடலுக்கு போதிய இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து இல்லாத போது ஏற்படும். இதனால் இரத்த நாளங்கள் உடலுக்கு தேவையான ஆக்சிஜனை எடுத்து செல்ல இயலாமல் போகும்போது உடலானது சோர்வாக காணப்படும். கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் இரத்தசோகையால் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியையும் அது பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் 55 சதவீத பெண்கள் இரத்தசோகை குறைபாடு உள்ளவர்கள் என்றும், 14 சதவீத பெண்கள் ஊட்டச்சத்துக் குறைபாடுடன் உள்ளனர் என்றும் ஆய்வில் கூறியுள்ளனர். இரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுடைய பெண்கள் தங்கள் குடும்பத்தை கவனிப்பதுடன், தங்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் பெண்கள் நல மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
இயற்கை உணவுகளையும், நம் பாரம்பரிய உணவு முறையையும் கடைபிடித்தாலே அனைவரும் ஊட்டச்சத்து குறைபாடின்றி தேக ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.