தமிழக மீனவர்களின் உடல்கள் சவுதியில் கரை ஒதுங்கியதா.

பரவிய செய்தி
ஒகி புயல் தாக்கியதால் கடலுக்கு சென்ற ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் கடலில் சிக்கி பாதிக்கப்பட்டனர். இதில் பல மீனவர்கள் இறந்த நிலையில், அவர்களது உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை. அவ்வாறு இறந்த தமிழக மீனவர்களின் உடல்கள் சவுதி அரேபியா கடற்கரையில் கரை ஒதுங்கின.
மதிப்பீடு
சுருக்கம்
ஆப்ரிக்காவை சேர்ந்த மக்கள் மற்ற நாடுகளில் குடியேறுவதற்காக படகுகள் மூலம் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் லிபியா நாட்டின் கடற்கரையில் கரை ஒதுங்கியது.
விளக்கம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் தென்கோடியைத் தாக்கி ஒகி புயலால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. மேலும், கடலுக்கு சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் புயலில் சிக்கி தவித்தனர். சில நாட்களுக்கு பிறகு கடலில் சிக்கிய பல மீனவர்கள் மீட்கப்பட்டனர். எனினும், பல மீனவர்களின் நிலை பற்றி எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த பல மீனவர்கள் கடலில் சிக்கி இறந்தனர்.
இந்நிலையில், ” புயலில் சிக்கி இறந்த பல மீனவர்களின் உடல்கள் சவுதி அரேபியா கடற்கரையில் கரை ஒதுங்கியதாகக் கூறி ஓர் வீடியோ பதிவானது முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. ஆனால், அந்த வீடியோ பதிவில் வரும் கரை ஒதுங்கிய உடல்கள் தமிழக மீனவர்களின் உடல்கள் அல்ல “.
கடந்த பிப்ரவரி மாதம், மத்தியத் தரைக் கடல் பகுதியின் வழியாக சென்ற ஆப்ரிக்கா நாட்டின் அகதிகளின் படகுகள் விபத்தில் சிக்கி 70-க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்தனர். லிபியா மற்றும் இத்தாலிக்கு இடைப்பட்ட பகுதிகளில் இது போன்ற விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன “. விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் அனைத்தும் லிபியாவின் ஜாவியாஹ் நகரின் கடற்கரையில் ஒதுங்கின. கரையோதிங்கிய உடல்களை அந்நாட்டு கடற்கரையோரக் காவற்படையினர் அப்புறப்படுத்திய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகின. இறந்தவர்கள் விபத்தில் சிக்கி இறந்தார்களா அல்லது கடற்படை வீரர்களின் தாக்குதலில் இவ்வாறு நடந்தததா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் ஒன்றும் முதல் முறையாக நிகழ்வதில்லை. பல ஆண்டுகளாகவே ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்கள் படகுகளில் சென்று இத்தாலி நாட்டில் அகதிகளாக குடியேறுகிறார்கள். அப்பயணத்தில் ஆபத்தான மத்தியத் தரைக் கடல் பகுதியை கடக்கும் பொழுது பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்துள்ளனர்.
இவ்வாறு ஆப்ரிக்கா அகதிகளின் உடல்களை தமிழக மீனவர்களின் உடல்கள் என்று தவறான செய்திகள் வலைதளங்களில் பரவி வருகின்றன.