This article is from Feb 15, 2018

தமிழன்னைக்கு பிரம்மாண்ட சிலை இல்லை- கையை விரிக்கும் தமிழக அரசு.

பரவிய செய்தி

மதுரையில் 100 கோடி மதிப்பில் தமிழன்னைக்கு சிலை அமைக்கும் திட்டம் தமிழக அரசால் கைவிடப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

தமிழன்னைக்கு சிலை அமைக்கும் பணிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்டது. எனினும் ரூ.50 கோடி செலவில் மதுரை தமிழ்ச்சங்க கட்டிடத்தில் அமைய உள்ள கண்காட்சியில்  தமிழன்னை சிலை அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

விளக்கம்

அமெரிக்காவில் சுதந்திர தேவி சிலை அமைந்திருப்பது போன்று மதுரையில் தமிழன்னைக்கு 100 கோடி மதிப்பில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என 2013-ம் ஆண்டில் 110  விதியின் கீழ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழன்னைக்கு பிரம்மாண்ட சிலை அமைவது தமிழ் மக்களால் பெருமையாகக் கருதப்பட்டது. இத்திட்டத்திற்கு தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

மதுரையின் பல பகுதிகளில் பிரம்மாண்ட தமிழன்னை சிலை அமைக்கும் திட்டம் குறித்த ஆய்வு பணிகள் நடைபெற்றன. பின் மதுரையின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஏரியை தேர்வு செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. எனினும், முதல்வரின் அறிவிப்புகள் வெளியாகி 5 வருடங்கள் ஆகியும் தமிழன்னைக்கு சிலை அமைக்கும் பணியை இதுவரை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து, மதுரையில் தமிழன்னைக்கு பிரம்மாண்ட சிலை வருவது எப்பொழுது என்று தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேலும், தமிழன்னைக்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கையை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில், தமிழன்னை சிலை அமைவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தின் சுற்றுச்சூழல் சரியின்மை காரணங்களால் இத்திட்டம் ஆரம்ப நிலையிலேயே (3 ஆண்டுகளுக்கு முன்பு) கைவிடப்பட்டுள்ளது. எனினும், மதுரை தமிழ்ச்சங்க கட்டிடத்தில் ரூ.50 கோடி மதிப்பில் தமிழ் தொன்மையை விளக்கும் கண்காட்சி ( அருங்காட்சியகம்) அமைய உள்ளது. இது பண்டைய தமிழர்களின் பண்பாட்டு கண்காட்சியாக அமையும். 

அத்தகைய கண்காட்சியில் தமிழன்னைக்கு சிலை அமைக்கப்படும். ரோமில் இருக்கும் சிற்பம் போன்று தமிழன்னைக்கு கீழே புதல்வர்கள், புதல்விகள் இருப்பது போன்று சிலை அமையும். இன்னும் ஓராண்டுக்குள் இப்பணிகள் நிறைவடையும் என்று தமிழக அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் பிரம்மாண்ட தமிழன்னை சிலை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது குறித்து தமிழ் ஆர்வலர்கள் பலர் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், தமிழன்னைக்கு சிலை இல்லை என்பதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ் புலவர் குழு பொருளாளர் மணிமேலை கூறியுள்ளார்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader