தமிழன் உலகை ஆள வேண்டும்- ஏ.ஆர்.ரகுமான் கருத்து

பரவிய செய்தி
தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல தலைவன் வரணும், தமிழ்நாட்டை மாத்தணும், விவசாயிகள் வாழ்கையை உயர்த்தணும் அவர்கள் தற்கொலை செய்துக் கொள்ள கூடாது. தமிழ்நாட்டின் கல்வி தரம் மாற வேண்டும், தமிழன் உலகை ஆள வேண்டும் என்று ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் கூறியுள்ளார்.
மதிப்பீடு
சுருக்கம்
ஊடக நேர்காணல் ஒன்றில் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் தமிழ்நாடு இவ்வாறெல்லாம் மாற வேண்டும் என்றுக் கூறி உள்ளார்.
விளக்கம்
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரத்யேகமாகப் பேட்டியளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் தமிழ்நாட்டின் தற்போதைய நிலை மாற வேண்டும், தமிழன் உலகை ஆள வேண்டும் என்று தனது கருத்தை கூறியுள்ளார்.
இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் தனக்கென்று இசையின் மூலம் ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியவர் இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள். இந்திய மொழிகள், ஆங்கில படங்களில் இசையமைப்பது மட்டும் அல்லாமல் தற்போது இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் தமிழன் உலகை ஆள வேண்டும் என்று கூறிய சொற்கள் பலரது நெஞ்சத்தில் தமிழன் என்ற உணர்வை மேலோங்கச் செய்துள்ளது.
பேட்டியின் போது தொகுப்பாளர் தமிழ் மொழிப் பற்றி வினவியபோது, தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல அது எனது அடையாளமாக கருதுகிறேன் என்று உரக்கச் சொன்னார். உலக திரைப்பட விழாவில் ஆஸ்கார் விருதினை பெறும் பொழுது “ எல்லா புகழும் இறைவனுக்கே “ என்று கூறியதற்கும் இதுவே காரணம் என்று கூறினார். மேலும் லண்டன் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தமிழ் மொழியில் பாடல்கள் பாடியதற்காக வடஇந்தியர்கள் எழுந்து சென்றது பற்றி கேட்டப் பொழுது, இசையை மொழியின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கவில்லை என்றும், இசை நிகழ்ச்சியானது “ நேற்று இன்று நாளை “ என்று தமிழ் இசை நிகழ்ச்சியாகவே அறிவிக்கப்பட்டது என்று ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.
இறுதியாக விவசாயிகள், நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவிப் பற்றி வினவிய போது, தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர் ஒருவர் வர வேண்டும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் அவர்கள் தற்கொலை செய்துக் கொள்ளாமல் தடுக்க வேண்டும், தமிழ்நாட்டின் கல்வித் தரம் உயர வேண்டும், தமிழ்நாடு கிளாசிக் ஆகணும் , தமிழன் உலகை ஆள வேண்டும் என்றுக் கூறினார். மெர்சல் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைத்த “ ஆளப்போறான் தமிழன் “ என்று தொடங்கும் பாடல் மக்கள் மனதில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் தனது அடையாளம் தமிழ் தான் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியிருப்பது பெருமையாக உள்ளது.