தமிழிசை பெற்ற விருது என்ன?

பரவிய செய்தி
இந்திய அளவில் சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது.
மதிப்பீடு
சுருக்கம்
தமிழக பாஜகவின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு 2017-ம் ஆண்டின் சிறந்த சேவை மற்றும் தலைமை பண்பிற்கான விருதினை அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மனித உரிமை அமைதி ஆணையம் என்ற அமைப்பு வழங்கி கௌரவித்தது.
விளக்கம்
தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை காலூன்ற வைப்பதை தனது குறிக்கோளாக கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், 2017 ஆம் ஆண்டிற்காக சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருதினை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு சர்வதேச மனித உரிமை ஆணையம் வழங்கி கௌரவித்தது என்று அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. எனினும், விருது வழங்கியவர்கள் உண்மையில் மனித உரிமை ஆணையமா ? என்ற கேள்விகளும் பலருக்கு எழுந்துள்ளது.
சிறந்த சேவை மற்றும் தலைமை பண்பிற்கான விருது:
ஜனவரி 30 தேதியன்று சென்னையில் சர்வதேச மனித உரிமை அமைதி ஆணையத்தின் விழா நடைபெற்றது. இதில், தமிழக பாஜகவின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு 2017-ம் ஆண்டின் சிறந்த சேவை மற்றும் தலைமை பண்பிற்கான விருது வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சர்வதேச மனித உரிமை அமைதி ஆணையத்தின் சர்வதேச தலைவர் டாக்டர் பெடிரிட்டோ மரியோ , சர்வதேச அமைதி தூதுவர் குவின் முன்னி, உதவித் தலைவர் ஆண்டனி பெர்னாண்டோஸ், பிவர்லி ஹில், அமெரிக்க மற்றும் இலங்கைக்கான தூதுவர் அல்வின் ரோலன்ட் திமோதி ஆகியோர் பாஜவின் தலைமை அலுவலகமான கமலாலயதிற்கு சென்றனர்.
அங்கு, தமிழிசை சௌந்தராஜனின் சிறந்த தலைமை பண்பை பாராட்டி 2017-ம் ஆண்டிற்காக சிறந்த சேவை மற்றும் தலைமை பண்பிற்கான விருதினை வழங்கினர். அதன் பின்னர், மனித உரிமை அமைதி ஆணையக் குழுவினர் தமிழிசை சௌந்தரராஜனை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
சர்வதேச மனித உரிமை அமைதி ஆணையம்:
சர்வதேச மனித உரிமை அமைதி ஆணையம் (IHRPC) அமெரிக்காவின் ப்ளோரிடாவைச் சேர்ந்த உலகளாவிய மனிதநேய அமைப்பாகும். இந்த அமைப்பு ப்ளோரிடா மாகாணத்தின் அரசு சாரா அமைப்புகளில்(NGO) பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் நோக்கம், பொதுசேவை மற்றும் மனித உரிமை மூலம் உலக சமூக நீதி ஆகியவற்றை ஊக்குவிப்பது ஆகும்.
ஊடகங்களில் பரவிய செய்தி :
தமிழிசை சௌந்தரராஜனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 2017-ம் ஆண்டின் சிறந்த பொதுநல சேவைக்கான விருதினைப் பெற்றார் என்றே பதிவிடப்பட்டுள்ளது.
ஆனால், 2017-ம் ஆண்டின் சிறந்த சேவை மற்றும் தலைமை பண்பிற்கான விருதினை, “ இந்தியாவின் சிறந்த பெண் அரசியல் தலைவர் மற்றும் சிறந்த பெண் தலைவர் ” என்ற தலைப்பாக மாறி செய்திகளிலும், வலைதள கருத்துகளும், மீம்களும் வெளியாகியது.
ஊடகங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது தவறான செய்திகள் என்று அறிந்தும் அதை நீக்காமல் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மறுப்பதிவு செய்துள்ளார்.
சர்வதேச மனித உரிமை அமைதி ஆணையம் என்ற அமைப்பால் பொது சேவைக்காக வழங்கப்பட்ட விருதை, “ இந்தியாவின் சிறந்த பெண் அரசியல் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ” என்று செய்திகள் வெளியாகி சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.