தமிழ்த்தாய் வாழ்த்து திருத்தி அமைக்கப்பட்ட பாடலா ?

பரவிய செய்தி
1970 இல் தமிழக அரசு மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய பாடலின் இடையே உள்ள வரிகளை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.
மதிப்பீடு
சுருக்கம்
பெ.சுந்தரனார் இயற்றிய மனோன்மணியம் என்ற நூலில் இடம்பெற்ற துதி பாடலின் இடையே உள்ள வரிகளை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்துள்ளனர்.
விளக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து‘ என்பது இந்திய தேசத்தில் தமிழை ஆட்சி மொழியாக கொண்ட தமிழகத்தில் பாடப்படும் வாழ்த்து பாடல் ஆகும். இப்பாடல் தமிழ் மொழியை வாழ்த்தி வணங்குவதாக அமைந்திருக்கும். தமிழ்த்தாய் வாழ்த்தானது அரசு விழாக்கள் மற்றும் பள்ளிகளின் காலை இறைவணக்கம் கூட்டத்தின் தொடக்கத்தில் பாடப்படும்.
தமிழ் மொழின் மீதும், தமிழகத்தின் மீதும் பேரன்பு கொண்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் பெ.சுந்தரனார் இயற்றிய புகழ்பெற்ற மனோன்மணியம் என்ற நாடக நூலில் “தமிழணங்கு வணக்கம்” தலைப்பில் இடம்பெற்ற “நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்” என்ற பாடலை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அறிவிக்க வேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டார். ஆனால், அதற்குள் அண்ணா அவர்கள் இயற்க்கை எய்தினார். 1970 இல் முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் அண்ணாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் சுந்தரனார் இயற்றிய மனோன்மணியம் நூலில் இடம்பெற்ற பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தார்.
ஆனால் அப்பாடல் முழுவதையும் ஏற்காமல், இடையே உள்ள வரிகளை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தனர். தமிழக அரசால் நீக்கப்பட்ட வரிகள்,
” பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்.”
நீக்கப்பட்ட வரிகள் கூறும் பொருளானது, ஆரிய மொழிகள் உலக வழக்கம் ஒழிந்து போல் சிதையாமல் சீரிளமை மிக்க தமிழே ஆகும். ஆனால் இவ்வரிகளை நீக்கிவிட்டு தமிழ் மொழியின் பெருமையை மட்டும் கூறும் விதத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றியுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் தமிழ் மொழியானது சிதையாமல், இன்றளவும் சீர்மிகு வளத்துடன் இருப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.