தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட தொன்மையானது: பிரதமர் மோடி.

பரவிய செய்தி
சமஸ்கிருதத்தை விட தொன்மையான தமிழ் மொழியை கற்றுக் கொள்ளாதது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மதிப்பீடு
சுருக்கம்
டெல்லியில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி தமிழ் தெரியாததற்கு வருந்துவதாக கூறினார்
விளக்கம்
டெல்லியில் உள்ள டால்கொத்ரா அரங்கில் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்தும், மாணவர்களின் தேர்வு பயத்தை போக்குவதற்காகவும் நடைபெற்ற “ பரீக்சா பே சார்ச்சா ” என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். மாணவர்களுக்கு மத்தியில் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் பல பகுதியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் சேகரிக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இதில், என்னை பிரதமராக கருதமால் நண்பனாக நினையுங்கள். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தன்னம்பிக்கை மற்றும் கவனத்துடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியது அவசியம். மன அழுத்தமின்றி தன்னம்பிக்கை மற்றும் புன்னகையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள் என்று கூறினார்.
பிரதமர் மோடி தன் உரையின் இறுதியில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்து உள்ளீர்கள். அவரவர் மொழியில் உரையாட முடியாததற்கு வருத்தம் அடைகிறேன், அதற்காக மன்னிப்பு தெரிவித்து கொள்கிறேன். பல மொழிகளை கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறியிருந்தார்.
தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி. இது பலருக்கு தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இனிமையான, அழகான தமிழ் மொழியில் தமக்கு “ வணக்கம் ” என்ற ஒரு வார்த்தை மட்டுமே தெரியும் என்றும், தம்மால் தமிழ் கற்றுக்கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
ஆனால், எதிர்காலத்தில் மாணவர்களின் தாய் மொழிகளில் தமது உரையைக் கொண்டு செல்லப் போவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
பிரதமர் மோடி தமிழ் மொழியை மேன்மைப்படுத்தி பேசியதற்கும், தமிழ் கற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியதற்கும் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களையும், பலர் அத்தகைய மேன்மையான தமிழ் மொழியை நீதிமன்ற வழக்காடு மொழியாகவும், ஆட்சி மொழியாகும் அறிவிக்குமாறு பிரதமருக்கு அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர். மேலும், மொழித் திணிப்பு போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.