தாய்லாந்தின் புல்லெட் இரயில் திட்டத்தின் மதிப்பு இந்தியாவை விட மிகக்குறைவா ?

பரவிய செய்தி
ஜப்பானிடம் இருந்து இந்தியா வாங்கி உள்ள 508கி.மீ தொலைவிற்கான புல்லெட் இரயிலின் விலை $17 பில்லியன் ஆகும். ஆனால் சீனாவிடம் இருந்து தாய்லாந்து வாங்கி உள்ள 850 கி.மீ தொலைவிற்கான புல்லெட் இரயிலின் விலை 5.3 பில்லியன் மட்டுமே.
மதிப்பீடு
சுருக்கம்
தாய்லாந்திற்கும் சீனாவிற்கும் இடையேயான புல்லெட் இரயில் ஒப்பந்தத்தின் முதல் கட்டப் பணிக்கு மட்டும் 5.3 பில்லியன் டாலர்கள் வழங்குவதாக தாய்லாந்து நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விளக்கம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் புல்லெட் இரயில் திட்டம் தொடங்குவது குறித்து பேசத் துவங்கினர். பின்னர் இந்தியாவில் புல்லெட் இரயில் திட்டம் பற்றிய ஒப்பந்தம் ஜப்பான் மற்றும் இந்தியா இடையே கையெழுத்தாகியது.
இந்தியாவின் முதல் புல்லெட் இரயிலானது குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை இடையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் செப்டெம்பரில் நடைபெற்ற இத்திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் ஜப்பானின் பிரதமர் ஷின்சு அபே கலந்துக்கொண்டு திட்டத்தை துவங்கி வைத்தார்.
இந்த புல்லெட் இரயிலானது மணிக்கு 300-350கி.மீ இயக்கப்படுவதால், அகமதாபாத் மற்றும் மும்பை இடையேயான 508கி.மீ தொலைவை மூன்றே மணி நேரத்தில் கடந்து விடும். இதன் பயணக் கட்டணம் 3000 முதல் 5000 வரை இருக்கக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அகமதாபாத் மற்றும் மும்பை இடையேயான 508கி.மீ தொலைவிற்கு அமைக்கப்பட உள்ள புல்லெட் இரயில் திட்டம் 2023 டிசம்பரில் முடிவடையும் என்றுக் கூறியுள்ளனர்.
இந்தியாவின் முதல் புல்லெட் இரயில் திட்டமானது 1.10 லட்சம் கோடி($17 பில்லியன்) செலவில் தொடங்க உள்ளனர், இதற்காக 88 ஆயிரம் கோடியை, 0.1 சதவீதம் வட்டி வீதத்தில் ஜப்பான் வழங்க உள்ளது. மேலும் இக்கடனானது 50 ஆண்டுகளில் திருப்பி அளிக்கப்படும்.
இதற்கிடையில், தாய்லாந்தில் 850கி.மீ தொலைவிற்கான புல்லெட் இரயில் திட்டம் தொடங்குவது குறித்து, தாய்லாந்திற்கும் சீனாவிற்கும் இடையில் புல்லெட் இரயில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியது.
தாய்லாந்தானது 850கி.மீ தொலைவிற்கான புல்லெட் இரயிலை 5.3 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளதாகவும், இந்தியா 508கி.மீ தொலைவிற்கான புல்லெட் இரயிலின் விலை $17 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளதாகவும் செய்திகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தாய்லாந்து நாட்டில் அதிவேக ரயில் திட்டம் தொடங்குவதன் மூலம், தாய்லாந்தின் லாவ்ஸ் எல்லை மற்றும் தாய்லாந்தின் கிழக்கு தொழிற்சாலை பகுதிகளுக்கு இடையேயான 873கி.மீ தொலைவு இணைக்கப்படும். இத்திட்டத்தின் முதற்கட்டப் பணியானது 250கி.மீ தொலைவிற்கு 5.15 பில்லியன் டாலர்கள் மதிப்பில் தொடங்கப்படும் என்று அந்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்ததாக 2016-ம் ஆண்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனவே, இந்திய மற்றும் தாய்லாந்தின் புல்லெட் இரயில் பற்றி பரவிய செய்திகள் தவறானவை என்பதை இதன் மூலம் அறியலாம்.