தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை.

பரவிய செய்தி
திருச்சி தனியார் பள்ளியில் தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனையும், கொண்டாடாதவர்களுக்கு பாராட்டு கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடியதற்காக மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விளக்கம்
தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்குப் பள்ளி நிர்வாகம் தண்டனை வழங்கியச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியானச் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பாலக்கரை கீழ்ப்புதூர் பகுதியில் சர்வைட் மெட்ரிக்குலேஷன் என்ற பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களது தீபாவளி விடுமுறைகள் முடிந்து பள்ளிக்கு சென்றுள்ளனர். பள்ளியில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு நடைபெறும் இறைவணக்கம் கூட்டத்தில் யார் யார் எல்லாம் தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடினீர்கள் என்று கேட்கப்பட்டுள்ளது. அதில், பட்டாசு வெடித்ததாகக் கூறியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை வழங்கியது மட்டுமல்லாமல், பட்டாசு வெடித்தவர்கள் இருளின் பிள்ளைகள் என்று தலைமையாசிரியர் கூறியுள்ளார் . எனவே பாவம் செய்ததாகக் கடவுளிடம் மன்னிப்பும் கேட்க வைத்துள்ளனர். மேலும், அதே பள்ளியில் தீபாவளிக்காக கையில் மருதாணி வைத்திருந்த மாணவிக்கு அடி விழுந்ததாக அம்மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.
இப்படி இருக்கையில், தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடவில்லை என்றுக் கூறியவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டுக்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இச்சம்பவம் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றுக்கூடி அப்பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். பின்னர், மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து போலீசார் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியரிடம் விசாரணையை நடத்தினர். அதில், தீபாவளிக்காக ஒலி மற்றும் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அறிவுரைகளைப் பின்பற்றி இவ்வாறு செய்ததாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் மீது திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி நாளில் பட்டாசினால் ஏற்படும் மாசினை குறைக்க மாணவர்களுக்கு தண்டனை வழங்கியதாகக் கூறுவது முட்டாள்தனமான செயலாகும். ஒன்று தீபாவளிக்கு முன்பே மாணவர்களிடம் மாசுபாடு பற்றி எடுத்துக் கூறியிருக்க வேண்டும், இல்லையென்றால் மாணவர்களுக்கு இவையெல்லாம் தவறு என்று கூறியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தண்டனை வழங்கியிருப்பது மதம் சார்ந்த செயலாக அனைவரையும் பார்க்க வைத்துள்ளது.