This article is from Feb 02, 2018

நடிகை சுகன்யாவின் வீட்டை அபகரித்தவர் யார் ?

பரவிய செய்தி

நடிகை சுகன்யாவின் வீட்டை அபகரித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி என்று ஒரு சாராரும் , பாஜக கட்சியனர் என்று இன்னொரு தரப்பும் குற்றச்சாட்டு .

மதிப்பீடு

விளக்கம்

நடிகை சுகன்யாவிற்கும் பிரபல அரசியல் கட்சியின் நிர்வாகி ஒருவருக்கும் இடையே வீட்டு பிரச்சனை ஒன்று நிலவி வருவதாகவும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுவதாகவும் கூறி வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

இச்செய்தி பற்றிய முதல் பதிவானது ஜனவரி 27-ம் தேதி சவுக்கு சங்கர் அவர்கள் முகநூல் பக்கத்தில் பதிவிட்டது. அதில், நடிகை சுகன்யாவிற்கு சொந்தமான வீடு ஒன்று சென்னை பெசன்ட் நகர் முதல் மெயின் ரோட்டில் இருக்கிறது.

நாம் தமிழர் இயக்கத்தின் வழக்கறிஞர் தடா சந்திரசேகர் 07.04.2015 அன்று சுகன்யா வீட்டில் வாடைக்கு குடி போகிறார். ஒப்பந்தத்தில் வீடு, குடி இருக்கும் பயன்பாட்டிற்கு மட்டுமே, வேறு எந்த பயன்பாட்டுக்கும் கிடையாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 2016 சட்டபேரவை தேர்தலுக்காக சுகன்யாவின் வீடு நாம் தமிழர் அலுவலகமாக மாற்றப்படுகிறது. வாசலில் வீட்டை மறைக்கும் அளவிற்கு சீமானின் பேனர்கள் வைக்கப்படுகின்றன.

உடனடியாக வீட்டை காலி செய்யுமாறு சுகன்யா நோட்டிஸ் அனுப்புகிறார். அவ்வளவுதான் அன்று முதல் வாடகை தருவதை தடா சந்திரசேகர் நிறுத்துகிறார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இன்று வரை நிலுவையில் இருக்கிறது. வீட்டையும் காலி செய்யவில்லை.

தற்போது தடா சந்திரசேகர் தரப்பில் சுகன்யாவுக்கு சமாதானத் தூது விடப்பட்டுள்ளது. என்ன சமாதானம் என்றால், நிலுவையில் உள்ள வாடகையை கேட்காதீர்கள் வீட்டை காலி செய்து கொடுத்து விடுகிறோம் என்பதே அந்த சமாதானம். இதற்கு சுகன்யா மறுப்பு தெரிவித்து விட்டார்.

பிரபல நடிகையான அவரையே இந்த அளவிற்கு பாடுபடுத்தும் நாம் தமிழர் கட்சியினர் செல்வாக்கு இல்லாத சாமானிய மக்களை என்ன  பாடு படுத்துவார்கள் என்று ஊகித்துக் கொள்ளுங்கள். இது தான் மாற்று அரசியலா ? என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் தனது முகநூல் பக்கத்தில், இதே செய்தியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் H.ராஜாவின் செய்ததாக மாற்றி பதிவிட்டிருந்தார். இதையும் சவுக்கு சங்கர் தனது பக்கத்தில் ஜனவரி 30-ல் பதிவிட்டு காண்பித்து இருந்தார். மேலும், இன்று வரை சுகன்யாவின் வீட்டை சந்திரசேகர் காலி செய்யவில்லை என்று சவுக்கு சங்கர் தனது பக்கத்தில் மற்றொரு பதிவில் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து Youturn பக்கத்திடம் நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தது,

மாநில செய்தித் தொடர்பாளர் சே. பாக்கியராசன் பதிவிட்டுள்ளார் ,  அதில்,

மூத்தவர் வழக்கறிஞர் சந்திரசேகர் தனது அலுவலகத்திற்கு என்கிற அடிப்படையில் ஒப்பந்தம் போட்டு, முன்பணமாக ரூ.1,50,000 கொடுத்து மாதம் ரூ.15,000 அந்த வீட்டை எடுக்கிறார். ஒன்றரை வருடமாக அதில் தனது அலுவலகத்தை நடத்துகிறார். மே 2016 தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பொழுது அந்த அலுவலகத்தின் கீழ் பகுதியில் பிரச்சார வாகனங்களும், பிரசார பொருட்களும் வைக்கப்பட்டது. அலுவலகத்திற்கு வெளியே சின்னத்துடன் பேனர் வைக்கப்பட்டது. இது வீட்டின் உரிமையாளருக்கு பிடிக்காத பட்சத்தில் அவர் நேரடியாக சந்திரசேகரை அணுகியிருக்கலாம். உரிமையாளரின் கோரிக்கைக்கிணங்க அதை அகற்றியிருப்பார். ஆனால் அந்த இடம் பிரச்சார ஒருங்கிணைப்புக்கு பயன்படுத்தப்பட்டதை காரணமாக வைத்து அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரியிடம் தகுதி நீக்கக்கோரி புகார் மனு அனுப்பப்படுகிறது. பிறகு நீதிமன்றத்தில் வழக்காகவும் தொடுக்கப்படுகிறது.

இவ்விசயம் தொடர்பாக மூத்தவரை கேட்டே பொழுது, ” இதற்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம் ? இது எனது தனிப்பட்ட பிரச்சனை. நான் யார் வீட்டையும் ஆக்கிரமிக்கவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. தீர்ப்பு எதுவாயினும் ஏற்று அதன்படி செயல்படுவேன் என்றார்.

இவ்வளவுதான் அதற்கு பின் உள்ள செய்தி.. சவுக்கு சங்கர் கொடுக்கும் பில்டப் அளவிற்கு அதில் ஒன்றுமில்லை… அவர் பதிவுகளில் போய் பதிவிடுவது, பதிவை போட்டு திட்டுவது எல்லாம் வேண்டாம். நமது வேலையை பார்ப்போம் என்று பதில் அளித்துள்ளார்.

  • நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி வழக்கறிஞர் சந்திரசேகர் மீது குற்றம் சாட்டி முகநூலில் பதிவிட்டிருந்தார் சவுக்கு சங்கர்.
  • அதே பதிவு திருத்தப்பட்டு பாஜக தேசிய செயலாளர் H.ராஜா செய்ததாகக் கூறி புரளிகளும் பரவியது.

குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்று நடிகை சுகன்யா தரப்பு பேசினால் அல்லது வழக்கு விவரங்கள் தெரியவந்தால் புரியும். ஆனால், ஒன்று மட்டும் தெளிவு இதில் பாஜகவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதே. இதையே சவுக்கு சங்கர் அவர்களும் நம்மிடம் உறுதிப்படுத்தினார்.

Please complete the required fields.
Back to top button
loader