This article is from Dec 07, 2017

நெடுஞ்சாலை மைல்கற்களில் இனி தமிழ் & ஆங்கிலம் மட்டுமே.

பரவிய செய்தி

தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மைல்கற்களில் உள்ள இந்தி மொழியை நீக்கி விட்டு முன்பிருந்தது போல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயரை எழுதுமாறு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

மதிப்பீடு

சுருக்கம்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இந்தி மொழி இல்லாமல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயரை எழுதிக் கொள்ளலாம் என்று “ நேஷனல் ஹைவே விங்க்ஸின் ” உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து, தமிழக தேசிய சாலையில் உள்ள மைல்கற்களில் இனி தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே முதன்மையாக இருக்கும்.

விளக்கம்

டந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மைல்கற்களில் இந்தி மொழியில் பெயர்களை மாற்றியமைத்தனர். சில பகுதிகளில் தமிழை நீக்கி விட்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் சர்ச்சைகளும், போராட்டங்களும் நடைபெற்றன. இவ்வாறு இருக்கையில், தற்போது மைல்கற்களில்  மாநில மொழிகளில் பெயர்கள் இடம்பெற வேண்டும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

     இந்தியன் ரோடு காங்கிரஸ் 2004-ம் ஆண்டின் விதிப்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் 5 கி.மீ தொலைவிற்கு உள்ள மைல்கற்களில் ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் பெயர்கள் இடம்பெற வேண்டும். மேலும், 1கி.மீ மற்றும் 3 கி.மீ தொலைவிற்கு உள்ள மைல்கற்களில் மாநில மொழி மற்றும் இந்தியில் பெயர்கள் இருத்தல் வேண்டும். ஆனால், இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் தமிழக தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆகியவை இவ்விதியை தமிழகத்தில் பின்பற்றவில்லை.

கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு, தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் சில பகுதிகளில் உள்ள மைல்கற்களில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்கள் மாற்றப்பட்டன. இதற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் இந்தி மொழியை நீக்க வேண்டும் என்று எதிர்ப்புகளை தெரிவித்தன.

   மாநில அரசின் “ நேஷனல் ஹைவே விங்க்ஸின் ” உயர் அதிகாரி கூறுகையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இந்தி மொழி இல்லாமல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயரை எழுதிக் கொள்ளலாம். தற்போது இந்திய மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் மைல்கற்களில் பெயரிடும் முறை மாற்றப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளின் நீளங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக பிரித்து குறிக்கப்படுகின்றன. ஆந்திர மாநில சாலைகளில் பணிகள் முடிவடைந்த பிறகு தமிழகத்தில் உள்ள மைல்கற்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பெயர்கள் எழுதப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையால் பராமரித்து வரும் 3,496கி.மீ தொலைவிற்கான சாலைகளில் உள்ள மைல்கற்களில் இந்தி மொழிகள் இருப்பதில்லை. இங்கு பெரும்பாலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்கள் இடம்பெறும். ஒரு சில முக்கிய மைல்கற்களிலோ அல்லது மும்மொழி பெரிய பெயர் பலகையிலோ மட்டுமே இந்தி மொழி இடம்பெறும் என்பதையும் கூறியுள்ளார்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader